பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு: அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்


பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு: அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்
x
தினத்தந்தி 27 Jan 2020 2:11 AM GMT (Updated: 27 Jan 2020 10:14 PM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் திறன் வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. 2,744 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள்.

உகான் நகரில் நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 769 பேருக்கு இந்த நோய் தாக்குதலும், 3,806 பேருக்கு நோய் தாக்கியிருக்கலாம் என சந்தேகமும் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உருவாகும் இந்த நிமோனியா காய்ச்சல் ‘2019-என்கோவ்’ என அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது. 2019 டிசம்பரில் இந்த வைரஸ் தாக்குதல் தொடங்கியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் முழுமையாக வளர்ச்சி அடைய 14 நாட்கள் ஆகும் என்றும், ஆனாலும் அந்த காலத்திலும் அதனால் தொற்றுநோயை பரப்ப முடியும். 14 நாட்களுக்கு பின்னர் அந்த வைரசுக்கு பரவும் திறன் மேலும் வலுவடைகிறது. தற்போது கொரோனா வைரசின் பரவும் திறன் வலுவடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மொத்தம் 5,794 பேருக்கு இந்த நோய் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 51 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். நோய் தாக்கியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 32,799 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 583 பேர் பரிசோதனைகளுக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

சீன அரசு வசந்தகால திருவிழா விடுமுறை 30-ந்தேதியுடன் முடிவடைய இருந்ததை மேலும் 3 நாட்களுக்கு (பிப்ரவரி 2-ந்தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டது. நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சீன பிரதமர் லி கெகியாங் தலைமையில் வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் ஆளுங்கட்சியான சீன கம்யூனிஸ்டு கட்சியில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் கெகியாங் தலைமையிலான அந்த குழு நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்கான முக்கிய நகரான உகான் நகருக்கு வந்தது.

வைரஸ் தாக்குதலை பார்வையிட ஒரு உயர் தலைவர் வருவது இதுவே முதல்முறை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த குழுவினர் உகான் நகரில் தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பணிகளை பார்வையிட்டனர்.

இதற்கிடையே சீன மக்கள் யாரும் உகான் நகருக்குள் நுழையவோ, நகரில் இருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 30-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் உகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மார்க்கெட்டில் அழகான விலங்குகள் விற்பனை மூலம் பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதைத்தொடர்ந்து வன உயிரின வர்த்தகத்துக்கும் சீன அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை தொற்றுநோய் ஒழிக்கப்படும் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வசந்தகால திருவிழாவையொட்டி உகான் நகரில் இருந்து ஏற்கனவே 50 லட்சம் பேர் வெளியேறிவிட்டனர். இந்த தடைக்கு பின்னர் 90 லட்சம் மக்கள் நகரில் இருப்பதாகவும் அந்த நகர மேயர் தெரிவித்துள்ளார்.

அழகான வனவிலங்குகள் இனப்பெருக்கம் செய்வோர் மற்றும் வளர்ப்போர் விதிகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். பொதுமக்களும் விலங்கு மாமிச உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல வெளிநாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவில் சீனா நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிய 100 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும் இதுவரை ஒருவரிடமும் வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story