அமெரிக்காவில் பிரபல கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் பலி


அமெரிக்காவில் பிரபல கூடைப்பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் பலி
x
தினத்தந்தி 27 Jan 2020 4:13 AM GMT (Updated: 27 Jan 2020 10:07 PM GMT)

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் தனது மகளுடன் உயிரிழந்தார். இந்த விபத்தில் மேலும் 7 பேர் பலியாகினர்.

அலாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட்(வயது 41). கூடைப்பந்து வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரராக திகழ்ந்தவர். கடந்த 2016-ம் ஆண்டுடன் விளையாட்டுக்கு முழுக்குபோட்ட அவர், மாம்பா ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் கூடைப்பந்து பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். இதில் அவருடைய 13 வயது மகளான கியானாவும் பயிற்சி பெற்று வந்தார். கோபே பிரையன்ட் தனது திறமைகளை மகள் கியானா மூலமும் வெளிப்படுத்தினார்.

இந்தநிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் அருகேயுள்ள தவுசன்ட் ஆக்ஸ் என்ற இடத்தில் கோபே பிரையன்டின் அகாடமி சார்பில் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் அவருடைய மகள் கியானாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என்பதால் தனியார் ஹெலிகாப்டர் மூலமும் பயணம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கோபே பிரையன்ட், அவரது மகள் கியானா மற்றும் பயிற்சியாளர்கள் உள்பட 9 பேர் நேற்று முன்தினம் இரவு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டனர்.

கலாபசாஸ் என்ற இடத்தின் அருகே கடும் பனிமூட்டத்தின் நடுவே ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. மேலும் அந்த இடம் அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாகும். இந்தநிலையில் எதிர்பாராத விதமாக அடர்ந்த மரங்களுக்கு நடுவே ஹெலிகாப்டர் சிக்கிக் கொண்டது. சிறிது நேரத்தில் அது பயங்கர சத்ததுடன் வெடித்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இச்சம்பவம் குறித்து அறிந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகர தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். ஆனாலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரையும் அவர்களால் பிணமாகத்தான் மீட்க முடிந்தது.

கோபே பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கூடைப்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமெரிக்காவே சோகத்தில் முழ்கியது.

கோபே பிரையன்ட் மற்றும் அவரது மகள் கியானா மறைவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டிகாப்ரியோ, பாடகர் ஜஸ்டின் பீபர் உள்பட பல்வேறு பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து வீரர் ஜோ பிரையன்ட்டின் மகன்தான் கோபே பிரையன்ட். இவருக்கு வனேஷா என்ற மனைவியும் நடாலியா(17), கியானா, பியான்கா(3), காப்ரி(7 மாதம்) ஆகிய 4 பெண் குழந்தைகள் உண்டு. கோபி பிரையன்ட் கூடைப்பந்தில் கில்லாடியாக திகழ்ந்தார்.

5 ஆண்டுகள் என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் இடம்பெற்றிருந்தார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் மற்றும் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க அணிக்காக பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். என்.பி.ஏ. கூடைப்பந்து வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச புள்ளிகள் பெற்ற 2-வது வீரராக(2006-ம் ஆண்டு டோரண்டோ அணியுடனான ஆட்டத்தில் 81 புள்ளிகள்) திகழ்ந்தார். 18 முறை என்.பி.ஏ. ஆல் ஸ்டார் பட்டம் வென்றுள்ளார். கடைசியாக 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற போட்டியுடன் ஓய்வு பெற்றார். அந்த போட்டியில் 60 புள்ளிகள் எடுத்தார்.

20 ஆண்டுகள் கூடைப்பந்து உலகை கட்டிப்போட்டிருந்த ஓர் ஆளுமையின் இந்த திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள கூடைப்பந்து ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story