கூட்டணி கட்சிகள் பூசல் ; சுலோவேனியா நாட்டு பிரதமர் ராஜினாமா அறிவிப்பு


கூட்டணி கட்சிகள் பூசல் ; சுலோவேனியா நாட்டு பிரதமர் ராஜினாமா அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jan 2020 11:40 AM GMT (Updated: 27 Jan 2020 11:40 AM GMT)

சுலோவேனியா நாட்டின் பிரதமர் சாரெக் கூட்டணி கட்சிகளின் பூசலால் ராஜினாமா அறிவிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார்.

ஜுப்லஜானா,

சுலோவேனியா நாட்டின் பிரதமராக மர்ஜான் சாரெக் பதவி வகித்து வருகிறார்.  கடந்த 2018-ம் ஆண்டில் பிற கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சி பதவியை ஏற்றார். எனினும், கடந்த நவம்பரில் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் நாடாளுமன்றத்தில் மசோதாக்களை கொண்டு வருவதில் சிக்கல் அதிகரித்தது.

காமெடி நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவரான சாரெக்கின் மைனாரிட்டி அரசில் நிதி மந்திரியாக இருந்தவர் ஆண்டிரெஜ் பெர்த்தோன்செல்ஜ். கூட்டணி கட்சிகளின் பூசலை அடுத்து மந்திரி பதவியில் இருந்து விலகுகிறேன் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், சுலோவேனிய பிரதமர் சாரெக் இன்று தனது ராஜினாமா அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இதுபோன்ற கூட்டணி கட்சியினரை வைத்து கொண்டு மக்களின் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது. மற்றொரு தேர்தலுக்கு பின்பே என்னால் அவற்றை நிறைவேற்ற முடியும்.

என்னை மக்கள் நம்புகிறார்களா? நான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களா? என மக்களிடம் கேட்பதற்காக, தேர்தல் நடத்துவதே எங்களால் செய்ய முடிந்த நேர்மையான விசயம் என்று அவர் கூறியுள்ளார்.

அந்நாட்டின் முக்கிய மற்றும் நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சியான சுலோவேனிய ஜனநாயக கட்சி புதிய அரசை அமைக்க முயற்சிக்க கூடும்.  இந்த முயற்சியில் தோல்வி ஏற்பட்டால், அடுத்து தேர்தல் நடைபெறும்.

Next Story