‘கொரோனா வைரஸ்’ தாக்குதலை முன்கூட்டியே கணித்தாரா பில்கேட்ஸ்..?


‘கொரோனா வைரஸ்’ தாக்குதலை முன்கூட்டியே கணித்தாரா பில்கேட்ஸ்..?
x
தினத்தந்தி 28 Jan 2020 4:44 AM GMT (Updated: 28 Jan 2020 7:31 AM GMT)

உலகை அச்சுறுத்தும் ஆபத்தான தொற்றுநோய் குறித்து மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பிக்ல்கேட்ஸ் 2018 ஆம் ஆண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

பல வெளிநாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்நாம், சிங்கப்பூர், சவுதி அரேபியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் இப்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, தைவான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து அனைத்து நாடுகளிலும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவிலும்  2 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக செய்தி வெளியானது. இவ்வாறாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் உலகின் பெரும் பணக்காரரும், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவருமான அமெரிக்க தொழிலதிபர் பில்கேட்ஸ், ஆபத்தான வைரஸ் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸ் மருத்துவ சங்கம் நடத்திய மாநாட்டில் பேசும் போது அவர் கூறியதாவது:-

சீனாவில் உருவாகும் ஒரு ஆபத்தான தொற்றுநோய் உலகையே அச்சுறுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார். இந்த நோய் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் இதனால் 6 மாதத்தில் சுமார் 3 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக நாடுகள் போருக்கு தயாராவது போல், தொற்று நோய் ஆபத்திற்கு தயாராக வேண்டும்   என்று அவர் கூறியுள்ளார். எந்த ஒரு சிறிய ஆய்வகத்தில் வைத்தும் ஆபத்தான நோய் கிருமியை உருவாக்கி விட முடியும். உலகின் எந்த நாட்டுக்கும் சில மணி நேரங்களில் நம்மால் பயணம் செய்ய முடியும் போது, இது போன்ற ஆபத்தான நோய்களும் எளிதில் பரவி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் பில்கேட்சின் இந்த கணிப்பு மிகவும் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.

Next Story