மெக்சிகோவில் எரிமலை வெடிப்புக்கு பின்னால் பறந்த பறக்கும் தட்டு!


மெக்சிகோவில் எரிமலை வெடிப்புக்கு பின்னால் பறந்த பறக்கும் தட்டு!
x
தினத்தந்தி 30 Jan 2020 11:27 AM GMT (Updated: 30 Jan 2020 11:27 AM GMT)

மெக்சிகோ நாட்டில் வெடித்த எரிமலையின் பின் வேகமுடன் வெள்ளை நிற ஒளி சென்றது பறக்கும் தட்டு பற்றிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

மெக்சிகோ,

மெக்சிகோ நாட்டில் எரிமலைகள் அதிகம் உள்ளன. அவை திடீரென வெடித்து எரிமலை குழம்பு மற்றும் சாம்பல் ஆகியவற்றை வெளியேற்றும்.  கடைசியாக அங்கு கடந்த 2017ம் ஆண்டு எரிமலை வெடித்தது.  அதன்பின் இந்த வருடம் போபோகேட்டபெட்டில் என்ற எரிமலை வெடித்து உள்ளது.

ஏறக்குறைய 17 ஆயிரத்து 802 அடி கொண்ட இந்த எரிமலை கடந்த திங்கட்கிழமை இரவு 11.18 மணியளவில் திடீரென வெடித்து சிதறியது.  இதன்பின்னர் 40 நிமிடங்கள் கழித்து 2வது முறையாகவும் வெடித்தது.

இந்த எரிமலை வெடிப்புக்கு பின் சாம்பல் புகை வானை நோக்கி உயரே சென்றது.  எரிமலை குழம்பும் வெளியேறி மலையை சுற்றி பரவியது.  வெள்ளி உருகி மலையின் மீது ஓடுவது போன்று காணப்பட்ட இந்த வீடியோவானது அந்நாட்டு அரசு அமைத்திருந்த கேமிராவில் பதிவானது.

எரிமலை வெடிப்புக்கு பின் அதிக வெப்பம் வெளியேறும்.  அதன் சாம்பல் புகை, லாவா எனப்படும் எரிமலை குழம்பு ஆகியவற்றால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட கூடும் என்பதனால், அந்த பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.

இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  15 வினாடிகள் ஓடும் அந்த பதிவில், வெள்ளை நிற ஒளி ஒன்று எரிமலையில் இருந்து வெளியேறும் புகைக்கு பின்புறத்தில் வேகமுடன் இடதுபுறம் இருந்து வலதுபுறம் நோக்கி செல்கிறது.  இது ஏலியன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளவர்களிடையே ஆர்வம் ஏற்படுத்தி உள்ளதுடன் சர்ச்சைக்குரிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

இதுபற்றி தி மிரர் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிலர் இது ஏலியனின் விண்கலம் என தங்களது கணிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.  ஆனால் சிலர், இந்த ஒளியானது எரிந்து போன நட்சத்திரம் அல்லது ஒரு விண்கல்லாக இருக்க கூடும் என தெரிவித்து உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

சிலர் பறக்கும் தட்டு பறந்து சென்றிருக்கும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.  எனினும் பலர், அந்த ஒளியானது ஒரு விமானம் ஆக இருக்க கூடும் என்றும் அல்லது செயற்கைக்கோளாக இருக்கும் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.  இதனால் ஏலியன் மற்றும் பறக்கும் தட்டு ஆகியவற்றை பற்றிய சர்ச்சை மீண்டும் தொடர்ந்து உள்ளது.

Next Story