பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் பலி


பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் பலி
x
தினத்தந்தி 31 Jan 2020 10:50 PM GMT (Updated: 31 Jan 2020 10:50 PM GMT)

பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் பலியாயினர்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆவெர்க்னே ரோன் ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் லா டவுஸ்யுயர் என்ற பனி மலை உள்ளது. 2 ஆயிரம் மீட்டர் உயரம் கொண்ட இந்த பனி மலையில் மலையேற்ற வீரர்கள் சாகச பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சமீபத்திய நாட்களில் இந்த பனிமலையில் உருவான புதிய பனி அடுக்கு நிலையற்றதாக இருக்கக்கூடும் என்றும், எனவே எளிதில் பனிச்சரிவு ஏற்படலாம் என்றும் பிராந்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் மலையேற்ற வீரர்கள் சாகச பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.

ஆனால் அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஒரு பெண் உள்பட 4 மலையேற்ற வீரர்கள் லா டவுஸ்யுயர் பனிமலையில் ஏறினர். அவர்கள் மலையின் மையப்பகுதியில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர சம்பவத்தில் மலையேற்ற வீரர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பெண் உள்பட மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story