உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல்: உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் - சீனா குற்றச்சாட்டு + "||" + China says US creating, spreading fear after virus outbreak

கொரோனா வைரஸ் தாக்குதல்: உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் - சீனா குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தாக்குதல்: உலக நாடுகளில் அச்சம் பரவ அமெரிக்காவே காரணம் - சீனா குற்றச்சாட்டு
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் பரவுவதற்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டி உள்ளது.
பீஜிங்,

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் தலைநகர் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலக அளவில் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரஸ் நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


அங்கு நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17,205 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சீனாவை தவிர்த்து இதுவரை 26 நாடுகளில் இந்த கொடிய வைரஸ் பரவி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் தலா 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிலிப்பைன்சில் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளார். இது சீனாவுக்கு வெளியே நிகழ்ந்த முதல் பலியாகும்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பாதிப்பை பொது சுகாதார அவசர நிலையாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் கடந்த 2 வாரங்களில் சீனாவுக்கு சென்று வந்த பிறநாட்டினர் அமெரிக்காவுக் குள் நுழைய அந்த நாட்டு அரசு அதிரடி தடை விதித்தது.

அதோடு, சீனாவில் இருக்கும் 21 வயதுக்கு உட்பட்ட அனைத்து அமெரிக்க பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை அங்கிருந்து வெளியேற அமெரிக்கா உத்தரவிட்டது. அப்படி சீனாவில் இருந்து வரும் அமெரிக்கர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அமெரிக்க சுகாதாரத்துறை அறிவித்தது.

அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, ஜப்பான், தென்கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பிறநாட்டினரை தங்கள் நாடுகளுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தன.

இந்தநிலையில், உலக நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் பரவுவதற்கு அமெரிக்காவே காரணம் என சீனா குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுனிங் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்கா உதவிகளை வழங்குவதற்கு பதிலாக உலக நாடுகளிடம் வைரஸ் குறித்து அச்சத்தை உருவாக்கி அதனை பரப்பி வருகிறது. சீன பயணிகள் மீது பயண தடை விதித்த முதல் நாடு அமெரிக்காதான். அந்த நாட்டை பின்பற்றியே ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தடைகளை அறிவித்துள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தொற்றுநோய் தடுப்பு திறன்களை வலுவாக கொண்டு வளர்ந்த நாடுகளாகும். அவை உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளுக்கு மாறாக அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பதில் முன்னிலை வகித்துள்ளன. இது ஏற்புடையது அல்ல என்று அவர் கூறினார்.

உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் எல்லைகளை மூடுகிறபோது, பயணிகள் சட்டவிரோதமான முறையில் நாடுகளுக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும், இது வழக்கத்தை விட அதிவேகத்தில் வைரஸ் பரவுவதற்கு வழி வகுக்கும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது
டிரம்பின் அலட்சியம், தவறான முடிவுகள், பிடிவாதம் ஆகியவற்றால் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
3. சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!
சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகின.
4. சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி
சீனாவில் காட்டுத்தீயில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை...
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்த பிளாஸ்மாக்களை பிரித்து அதை தற்போதைய கொரோனா நோயாளிகளுக்கு செலுத்தி, காப்பாற்றும் முயற்சிக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.