ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி


ஆஸ்திரேலியாவில் பரிதாபம்: கூட்டத்துக்குள் கார் புகுந்து சிறுவர், சிறுமிகள் 4 பேர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2020 10:44 PM GMT (Updated: 3 Feb 2020 10:44 PM GMT)

ஆஸ்திரேலியாவில் கூட்டத்துக்குள் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி சிறுவர், சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள ஒரு வீதியில் சாலையோர நடைபாதை மீது சிறுவர், சிறுமிகள் 7 பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த சாலையில் அதிவேகத்தில் வந்த கார் ஒன்று நடைபாதை மீது ஏறி சிறுவர், சிறுமிகள் கூட்டத்துக்குள் பாய்ந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 8 முதல் 12 வயதுக்குட்பட்ட 3 சிறுமிகளும், 13 வயது சிறுவனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களில் ஒரு சிறுவனும், 2 சிறுமிகளும் சகோதர, சகோதரிகள் ஆவார்கள். மற்றொரு சிறுமி அவர்களின் உறவுக்காரர் ஆவார். மேலும் இந்த விபத்தில் 2 சிறுமிகளும், ஒரு சிறுவனும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

முன்னதாக விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்தனர்.


Next Story