புர்கினோ பாசோவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி


புர்கினோ பாசோவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்: 20 பேர் பலி
x
தினத்தந்தி 3 Feb 2020 10:49 PM GMT (Updated: 3 Feb 2020 10:49 PM GMT)

புர்கினோ பாசோவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.

வாகடூகு,

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினோ பாசோவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சாகேல் பிராந்தியத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் சாகேல் பிராந்தியத்தின் தலைநகர் டோரி அருகே உள்ள பானி என்ற கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் மோட்டார்சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர்.

மேலும் வீடுகளுக்குள் இருந்தவர்களை தரதரவென இழுத்து வந்து வீதியில் தள்ளி சுட்டுக்கொன்றனர். இந்த கொடூர தாக்குதலில் பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இதேபோல் கடந்த வாரம் சாகேல் பிராந்தியத்தின் சில்காட்ஜி நகரில் உள்ள சந்தை பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் கொன்று குவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Next Story