இந்தியா கட்டுப்பாட்டை தொடர்ந்து மலேசியாவிடம் இருந்து அதிக பாமாயில் பாகிஸ்தான் வாங்கும் - இம்ரான் கான்


இந்தியா கட்டுப்பாட்டை தொடர்ந்து  மலேசியாவிடம் இருந்து அதிக பாமாயில் பாகிஸ்தான் வாங்கும் - இம்ரான் கான்
x
தினத்தந்தி 4 Feb 2020 9:59 AM GMT (Updated: 4 Feb 2020 9:59 AM GMT)

இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

கோலாலம்பூர்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் மதச்சார்பற்ற நாடு என்று  கூறும் இந்தியா இப்போது முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். "நாங்கள் அதை இங்கே  செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பம் இருக்கும், உறுதியற்ற தன்மை இருக்கும், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்"  என கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி பேசி இருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அரசாங்கம்  இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால் இறக்குமதியாளர்கள்  இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய  தொடங்கியுள்ளனர். இதனால் மலேசியா வரத்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மலேசியாவின் பாமாயில் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள் தற்காலிகமானதுதான் என்று தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் மலேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில்  மலேசியாவிலிருந்து அதிக பாமாயில் வாங்க பாகிஸ்தான் தனது சிறந்த முயற்சியை மேற்கொள்ளும் என கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

நீங்கள் எங்களுடன் நின்று அநீதியைப் பற்றி பேசியதற்கு  பாகிஸ்தான் சார்பாக நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.டிசம்பரில் மலேசியாவில் நடந்த முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

இஸ்லாத்தின் நற்சிந்தனைகளை பரப்பவும், இஸ்லாமியப் போபியாவை எதிர்த்துப் போராடவும், இளம் முஸ்லிம்களுக்கான  எண்ணங்களை  வளர்க்கவும் மலேசியாவும்,பாகிஸ்தானும் ஒரு கூட்டு ஊடகத் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றன என கூறினார்.

மலேசியாவிலிருந்து கடந்த ஆண்டு பாகிஸ்தான் 11 லட்சம் டன் பாமாயிலை மட்டுமே  வாங்கியது, அதே நேரத்தில் இந்தியா 44 லட்சம்  டன் வாங்கியது என்று மலேசிய பாமாயில் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Next Story