கொரோனா வைரஸ் பாதிப்பு: ஆய்வு செய்ய அமெரிக்க சுகாதார நிபுணர்களுக்கு சீனா அனுமதி


கொரோனா வைரஸ் பாதிப்பு:  ஆய்வு செய்ய அமெரிக்க சுகாதார நிபுணர்களுக்கு சீனா அனுமதி
x
தினத்தந்தி 4 Feb 2020 11:58 AM GMT (Updated: 4 Feb 2020 11:58 AM GMT)

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் குழுவில் உள்ள அமெரிக்க சுகாதார நிபுணர்களை அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

பீஜிங்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் கடுமையான தாக்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வுகான் நகரம், கொரோனா வைரஸ் காரணமாக முற்றிலும் முடங்கியுள்ளது. நோய் பாதிப்பு பரவாமல் இருக்க, சீனாவின் பல்வேறு நகரங்கள் சீல்வைக்கப்பட்டு அங்குள்ள 6 கோடிக்கும் மக்கள் வேறு பகுதிகளுக்கு செல்ல விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

கொரோனா வைரசுக்கு இதுவரை 426 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு சீனாவில் சார்ஸ் நோய் தாக்கியபோது ஒன்பது மாதங்களில் 349 பேர் உயிரிழந்தனர். தற்போது வேகமாக பரவி வரும் கொரோனாவைரசால் சில வாரங்களிலேயே 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில்  தொழில், வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து  அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை உருவாக்கி பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பின் குழு  ஒன்று சீனா செல்கிறது. இந்த குழுவில் அமெரிக்க  சுகாதார நிபுணர்களும் இடம் பெற்று உள்ளனர்.  இவர்களுக்கு  சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Next Story