அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பெண்கள் பலி


அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 4 Feb 2020 10:23 PM GMT (Updated: 4 Feb 2020 10:23 PM GMT)

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 2 பெண்கள் பலியாயினர்.

நியூயார்க்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் பிராசோஸ் நகரில் ‘டெக்சாஸ் ஏ அன்ட் எம்’ பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்பும் உள்ளது.

இந்த குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இது குறித்து மாணவர் ஒருவர் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு அறையில் 2 பெண்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மேலும் 2 வயதான ஆண் குழந்தை படுகாயம் அடைந்த நிலையில் இருந்தது. உடனடியாக போலீசார் அந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

உயிரிழந்த 2 பெண்களும் மாணவிகளா அல்லது பேராசிரியைகளா என்பதை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிக்கவில்லை. அதேபோல் இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ நகருக்கு சென்றுகொண்டிருந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பஸ்சில் இருந்த பயணி ஒருவர் திடீரென சக பயணிகளை துப்பாக்கியால் சுட்டார். இதில் 51 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓடினார். எனினும் சிறிது நேரத்துக்கு பிறகு அவர் போலீசிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story