கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு


கொரோனா வைரஸ் தாக்குதல் ; சீனாவில் பலி எண்ணிக்கை 560 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 Feb 2020 1:23 AM GMT (Updated: 6 Feb 2020 1:23 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே அங்கு 2 புதிய தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சுமார்  28,000-பேர்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story