துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு: மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலி


துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவு: மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலி
x
தினத்தந்தி 6 Feb 2020 10:30 PM GMT (Updated: 6 Feb 2020 8:10 PM GMT)

துருக்கியில் அடுத்தடுத்து பயங்கர பனிச்சரிவுகள் ஏற்பட்டதில் மீட்பு குழுவினர் உள்பட 38 பேர் பலியாகினர்.

இஸ்தான்புல், 

துருக்கியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வேன் மாகாணத்தின் பாசெசேஹிர் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த வழியாக சென்ற ஒரு மினி பஸ்சும், பனித்துகள்களை அகற்றும் வாகனமும் சிக்கிக்கொண்டன.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்தன. பனியில் சிக்கி மாயமானவர்களை மீட்கும் பணியில் 700-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அங்கு மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். சக மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கினர்.

எனினும் 33 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. சுமார் 60 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். ஆனால் மீண்டும் பனிச்சரிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

Next Story