சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; முதன்முறையாக அமெரிக்கா, ஜப்பான் நாட்டினர் பலி


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; முதன்முறையாக அமெரிக்கா, ஜப்பான் நாட்டினர் பலி
x
தினத்தந்தி 8 Feb 2020 11:33 AM GMT (Updated: 8 Feb 2020 11:33 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதன்முறையாக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பலியாகி உள்ளனர்.

பெய்ஜிங்,

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அந்நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது.  இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் உகானில் இந்த வைரஸ் பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,  உகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 723 ஆக உயர்ந்துள்ளது.  இதேபோன்று 34 ஆயிரத்து 598 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இவர்களில் அமெரிக்காவை சேர்ந்த 60 வயது நிறைந்த பெண் ஒருவர் உகான் நகரிலுள்ள ஜின்யின்டாங் மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது இரங்கல்கள் என அமெரிக்க தூதரக செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதேபோன்று உகான் நகரில் மருத்துவமனையில் நிம்மோனியா காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த 60 வயது நபர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார்.  இதனை டோக்கியோ நகரில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்து உள்ளது.

இதனால் அமெரிக்கா மற்றும் ஜப்பான் என முதன்முறையாக வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story