கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 242 பேர் பலி


கொரோனாவின் கோர தாண்டவம் : ஒரே நாளில் 242 பேர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2020 7:39 AM GMT (Updated: 13 Feb 2020 7:39 AM GMT)

உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் 242 பேர் பலியாகி உள்ளனர்.

யுகான்

கொரோனா வைரசால் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே நோய் குறித்த பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியது முதல் மிக அதிக எண்ணிக்கையில் கடந்த 10ம் தேதிதான் ஒரேநாளில் 103 பேர் பலியாகியிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கையை காட்டிலும் 2 மடங்கு எண்ணிக்கையில் உயிர் பலி ஒரே நாளில் நேரிட்டுள்ளது. நேற்று முன்தினம் கொரானா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து விட்டதாக சீனா அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளிலேயே 242 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து சீனாவில் மட்டும் கொரானா வைரசுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 1,367ஆக அதிகரித்துள்ளது. இது தவிர்த்து ஹூபே மாகாணத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 2,015 பேருக்கு புதிதாக கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதே சமயம் பிப்ரவரி 12ம் தேதி மட்டும் 14,840 பேருக்கு நோய் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி வரை உலகளவில் கொரோனா வைரசால் 1,368 பேர் உயிரிழந்துள்ளனர். 60,310 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் மிக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளை சுட்டிக்காட்டி, உடனடியாக கட்டுப்படுத்தவில்லையெனில், மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி விடும் என உலக சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஹூபே மாகாணத்தில் ஒரே நாளில் உயிரிழப்பு மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுரவேகத்தில் அதிகரித்ததற்கான காரணத்தை நிபுணர்கள் விவரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தோன்றிய வுகான் நகரம் ஹூபே மாகாணத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணம், நோயால் பலியானவர்கள் மற்றும் தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை குறித்த அதன் தினசரி அறிக்கையில், வியாழக்கிழமை முதல் முறையாக மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை சேர்க்கத் தொடங்கியது.

தொற்றுநோய் பரவுவதைத் தடுப்பதில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய உதவும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.



சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் ஜெங் குவாங் கூறியதாவது:-

 ஹூபே மாகாணத்தின் 14,840 புதிய வழக்குகளில் 13,332 மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்டவை. ஆய்வக சோதனைகள் மூலம் இன்னும் தொற்றுநோய் உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், நோய் அறிகுறிகளைக் காட்டும் நபர்களே மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகள் என ஜெங் விளக்கினார்.

நோய் அறிகுறிகளைக் காண்பிப்பவர்களும், சி.டி ஸ்கேனனில் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக காண்டறிப்பட்டவர்களும் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளில் அடங்குவர். உயிரிழந்த 242 பேரில், 135 பேர் மருத்துவ ரீதியாக கண்டறியப்பட்ட வழக்குகளில் அடங்குவர். 

Next Story