துருக்கி ராணுவம் அதிரடி தாக்குதல்: சிரியா வீரர்கள் 55 பேர் கொன்று குவிப்பு


துருக்கி ராணுவம் அதிரடி தாக்குதல்: சிரியா வீரர்கள் 55 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 15 Feb 2020 12:00 AM GMT (Updated: 14 Feb 2020 11:55 PM GMT)

துருக்கி ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சிரியா வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டனர்.

டமாஸ்கஸ், 

சிரியாவின் வடமேற்கில் உள்ள இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு அரசு படையினருக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நடந்து வருகிறது. அரசு படைக்கு உதவியாக ர‌ஷிய ராணுவம் அங்கு தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்துகிறது.

கடந்த 2 மாதங்களாக நடந்து வரும் இரு தரப்பு மோதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி இடம் பெயர்ந்துள்ளனர்.

இதற்கிடையில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக இத்லிப் மாகாணத்தில் முகாமிட்டுள்ள துருக்கி வீரர்களை குறிவைத்து சிரிய ராணுவம் தொடர்ந்து, தாக்குதலை நடத்தி வருகிறது. துருக்கி ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் சிரிய ராணுவம் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் துருக்கி வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இத்லிப் மாகாணத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிரிய ராணுவ நிலைகளை குறிவைத்து துருக்கி ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சிரிய வீரர்கள் 55 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த தகவலை துருக்கி ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கூறுகையில், ‘‘சிரியாவில் இருக்கும் எங்கள் நாட்டு வீரர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அந்நாட்டுடனான ஒப்பந்தத்தை பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் உள்ள ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்’’ என கூறினார்.

Next Story