உலக செய்திகள்

தலீபான்களுடன் 2 வாரத்தில் அமைதி ஒப்பந்தம் - டிரம்ப் நம்பிக்கை + "||" + Peace deal with Taliban in 2 weeks - Trump hopes

தலீபான்களுடன் 2 வாரத்தில் அமைதி ஒப்பந்தம் - டிரம்ப் நம்பிக்கை

தலீபான்களுடன் 2 வாரத்தில் அமைதி ஒப்பந்தம் - டிரம்ப் நம்பிக்கை
தலீபான்களுடன் 2 வாரத்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வா‌ஷிங்டன், 

ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போர் தொடங்கியதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அரசு படைக்கு அமெரிக்க ராணுவம் பக்கபலமாக இருந்து வருகிறது.

முடிவில்லாமல் நீண்டு வரும் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தையை தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலீபான் தரப்பு ஏற்றுக்கொண்டது. அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்க தயாராக இருந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகினர்.

இதனால் கோபம் அடைந்த டிரம்ப், தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிரடியாக அறிவித்தார். இதனால் அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே மீண்டும் மோதல் வலுத்தது.

இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணமாக சென்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி இருப்பதாக அறிவித்தார். அதன்படி கத்தார் தலைநகர் தோகாவில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், தலீபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், முதற்கட்டமாக ஆப்கானிஸ்தானில் 2 நாள் சண்டை நிறுத்தத்தை கொண்டுவர இருதரப்புக்கும் இடையே ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.

ஆனால் ஒரு சில காரணங்களால் அமைதி பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. எனினும் சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.

கத்தார் தலைநகர் தோகாவில் தலீபான் பிரதிநிதிகளும், அமெரிக்க அதிகாரிகளும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலீபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா மற்றும் தலீபான் பிரதிநிதிகள் நெருங்கி வருவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஆப்கனிஸ்தானின் மிக நீண்ட போரை முடிவு கொண்டுவருவதற்கு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு நாங்கள் நெருங்கியுள்ளோம். 2 வாரங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என்று நம்புகிறேன். நாம் அதை பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் அளவுக்கு அதிகமான அமெரிக்க வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பல காலம் அங்கு இருக்க செய்யக்கூடாது. அவர்கள் வீடு திரும்புவதற்கான நேரம் இது. இவ்வாது அவர் கூறினார்.