கொரோனா வைரஸ் பாதிப்பு : சொகுசு கப்பலில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற தூதரகம் முயற்சி


டைமண்ட் பிரின்சஸ்  சொகுசு கப்பல்  Photo by Carl Court/Getty Images
x
டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பல் Photo by Carl Court/Getty Images
தினத்தந்தி 15 Feb 2020 8:31 AM GMT (Updated: 15 Feb 2020 8:31 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சொகுசு கப்பலில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

டோக்கியோ

ஹாங்காங்கில் இருந்து ஜப்பான் துறைமுகத்துக்கு வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசு கப்பலை கொரோனா வைரஸ் பீதி காரணமாக நடுக்கடலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

அதில் இருந்த 3 ஆயிரத்து 711  பயணிகள், ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. இதில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

அந்த கப்பலில் இதுவரை மொத்தம் 218 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சொகுசு கப்பலில் 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 132 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவார்கள்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் கப்பலில் பணியாற்றும் மேலும் ஒரு இந்தியருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் கூறும்போது, ‘சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 3 இந்தியர்களையும் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உடல் நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஜப்பான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கப்பலில் உள்ள இந்தியர்கள் நல்ல முறையில் இருப்பதை உறுதிபடுத்துக்கொண்டிருக்கிறோம் 

மூன்று இந்தியர்கள் உட்பட 218 பேர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியதால், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்த பின்னர், கப்பலில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இறக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என கூறி உள்ளது.

கப்பலில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய தூதரகம் சார்பில் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘உங்களுக்கு உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம்’ என்று உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே கப்பலில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பயணிகளை வெளியே அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று 11 பயணிகள் கப்பலில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அழைத்துச் சென்ற சுகாதார அதிகாரிகள் மருத்துவ பரிசோதனையை நடத்தினர்.

Next Story