இந்தியாவுக்கு வெளியே இருந்து பார்க்கும்போது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக காட்டும் ‘கூகுள்’ வரைபடம் புதிய சர்ச்சை


இந்தியாவுக்கு வெளியே இருந்து பார்க்கும்போது   காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக காட்டும் ‘கூகுள்’ வரைபடம்   புதிய சர்ச்சை
x
தினத்தந்தி 15 Feb 2020 11:15 PM GMT (Updated: 15 Feb 2020 7:51 PM GMT)

இந்தியாவுக்கு வெளியே இருந்து பார்க்கிறபோது காஷ்மீரை பிரச்சினைக்குரிய இடமாக கூகுள் வரைபடம் காட்டுகிறது. இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன், 

கூகுள் வரைபடம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. கூகுள் வரைபடத்தை பின்பற்றி வாகனங்களில் செல்வோர் தவறான பாதைக்கு கொண்டு போய் விடப்பட்டு விடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் காஷ்மீரை கூகுள் வரைபடம் சர்ச்சைக்குரிய விதத்தில் காட்டுகிறது.

இந்தியாவில் இருந்து பார்க்கிறபோது, கூகுள் இணையதள வரைபடத்தின் எல்லைகள், காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக காட்டுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு வெளியே இருந்து இந்த வரைபடத்தைப் பார்த்தால் காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாக சித்தரிக்கிற விதத்தில் எல்லைக்கோட்டை புள்ளிகளைக் கொண்டு வெளியிட்டு இருக்கிறது.

பாகிஸ்தானில் இருந்து பார்த்தால்

அதாவது, பாகிஸ்தானில் இருந்து கொண்டு கூகுள் வரைபடத்தை பார்ப்பவர்களுக்கு வரைபடத்தின் எல்லைகள் காஷ்மீரை ஒரு பிரச்சினைக்குரிய இடமாக காட்டும். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து பார்த்தால், அதே வரைபடத்தின் எல்லைகள் காஷ்மீரை முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக காட்டும்.

குறிப்பாக நீங்கள் எந்த நாட்டில் இருந்து கூகுள் இணையதள வரைபடத்தை பார்க்கிறீர்களோ, அதற்கேற்ப அது சர்ச்சைக்குரிய எல்லைகளை மாற்றுகிறது.

பின்னணி என்ன?

இந்த செய்தியை அமெரிக்காவில் இருந்து வெளியாகிற ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை வெளியிட்டு இருக் கிறது.

இதுபற்றி கூகுள் இணையதள நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரை கேட்டபோது அவர் கூறியதாவது:-

சர்ச்சைக்குரிய பகுதிகள் மற்றும் அம்சங்களை நியாயமாக சித்தரிப்பதற்காக கூகுள் ஒரு நிலையான, உலகளாவிய கொள்கையை கொண்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய அல்லது உரிமை கோரும் நாடுகள், அதன் உலகளாவிய களத்தில் உரிமை கோரல்களை கூகுள் வரைபடம் காட்டுகிறது. இது எந்த ஒரு தரப்பும் எடுத்துள்ள நிலைப்பாட்டை அங்கீகரிக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ இல்லை. உள்ளூர் பிரதேசத்துக்கு ஏற்ப மொழிபெயர்க்கப்பட்ட வரைபட தயாரிப்புகள், உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்றபடி அந்த நாட்டின் நிலையை எடுத்துக் காட்டுகின்றன.

உறுதி

ஆனால் நாங்கள் எங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு, மிகச்சிறந்ததும், மிகவும் புதுப்பித்ததுமான, அதிக துல்லியமான வரைபடங்களை தயாரித்து அளிப்பதற்கு உறுதி கொண்டுள்ளோம். அதிகாரபூர்வமான ஆதாரங்களில் இருந்து புதிய அல்லது அதிகம் துல்லியமான தகவல்கள் கிடைக்கிறபோது அல்லது புவிசார் அரசியல் நிலைமைகள் மாறும்போது எங்கள் வழங்குனர்கள் தருகிற தரவுகள் அடிப்படையில் எல்லை புதுப்பிப்புகளை நாங்கள் செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story