இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்குகள்; மார்ச் 17ல் விசாரணை


இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான ஊழல் வழக்குகள்; மார்ச் 17ல் விசாரணை
x
தினத்தந்தி 18 Feb 2020 3:59 PM GMT (Updated: 18 Feb 2020 3:59 PM GMT)

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்குகள் பற்றிய விசாரணை மார்ச் மாதம் 17ந்தேதி தொடங்கும்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது லஞ்சம் பெறுதல், மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி என எண்ணற்ற வழக்குகள் உள்ளன.  இவற்றில் கோடீசுவர நண்பர்களிடம் இருந்து விலை மதிப்பற்ற பரிசு பொருட்களை பெற்றுள்ளார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  ஊடகங்களில் வரும் செய்திகள் தனக்கு சாதகம் ஆக இருக்கும் வகையில் பணம் கொடுத்துள்ளார் என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இஸ்ரேலில் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட முதல் பிரதமர் நேதன்யாகு.  அந்த நாட்டின் நீண்டகால பிரதமர் என்ற சாதனையை படைத்துள்ளவர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதுடன், எந்த தவறும் செய்யவில்லை என அவர் கூறி வருகிறார்.  அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தல் வருகிற மார்ச் 2ந்தேதி நடைபெற உள்ளது.  ஒரு வருடத்திற்குள் நடைபெறும் 3வது தேர்தல் இதுவாகும்.

இந்நிலையில், இந்த வழக்குகள் பற்றிய விசாரணை தொடங்க உள்ளது.  இதுபற்றி நீதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பொது தேர்தல் நடந்த பின்னர் 2 வாரங்கள் கழித்து, ஜெருசலேம் நகரில் வழக்குகள் பற்றிய குற்றச்சாட்டு பத்திரம் நேதன்யாகு முன்னிலையில் வாசிக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

Next Story