மூளை அறுவை சிகிச்சையின் போது வயலின் வாசித்த பெண்


படம் : Twitter/ The Independent
x
படம் : Twitter/ The Independent
தினத்தந்தி 19 Feb 2020 12:25 PM GMT (Updated: 19 Feb 2020 1:02 PM GMT)

இசை திறன்கள் பாதிக்கப்படாமல் இருக்க மூளை அறுவை சிகிச்சை செய்யும்போது வயலின் வாசித்த பெண்.

லண்டன்

லண்டன் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில், டாக்மர் டர்னர் என்ற 53 வயதான பெண்ணின் மூளையில், உள்ள மில்லி மீட்டர் அளவிலான கட்டி அகற்றப்பட்டது.  

டாக்மருக்கு 2013ஆம் ஆண்டு வலிப்பு நோய் ஏற்பட்ட போது மூளையில் சிறிய அளவில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த கட்டி மூளையின் வலது முன் பகுதியில் இருந்துள்ளது. அது இடது கையின் செயல் திறனை கட்டுப்படுத்தும். எனவே அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர் இந்த அறுவை சிகிச்சையால் வயலின் வாசிக்கும் திறன் இழந்துவிடலாம் என்று அதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன்  இந்த அறுவை சிகிச்சையால் பெரிய பாதிப்பு இல்லாத அளவிற்கு ஒரு திட்டத்தை கூறி உள்ளார்.இசையில் பட்டம் பெற்ற மற்றும் திறமையான பியானோ கலைஞரான பேராசிரியர் அஷ்கன், டாக்மரின்  இசை திறன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டத்தை வகுத்தார்.

அவரிடம் தனது வயலின் இசை திறமை தன்னை விட்டு செல்வதை தன்னால், ஏற்றுக்கொள்ள இயலாது என்று டாக்மர் தெரிவித்ததால், அறுவை சிகிச்சைக்கு முன் வயலின் வாசிப்பதனால் மூளையில் ஏற்படும் இயக்கத்தை மருத்துவர்கள் வரைபடமாக தயாரித்துள்ளனர். அதன்படி மயக்கத்தில் இருந்த டாக்மர் வயலின் வாசித்துள்ளார் அப்போது மருத்துவர்கள் தலையை பிளந்து சிறு சிறு கட்டிகளை அகற்றியுள்ளனர். தொடர்ந்து இடது கையை இயக்கும் பகுதியில் சில பகுதிகளை விட்டு விட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு  பின் பேசிய பேராசிரியர்  அஷ்கன் டாக்மரின்  இடது கையில் முழு செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டு, ஆக்கிரமிப்புச் செயல்பாட்டில்  உள்ள சந்தேகத்திற்கிடமான அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 90 சதவீத கட்டியை அகற்ற முடிந்தது. டாக்மருக்கு வயலின் எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம், எனவே அவரது மூளையின் நுட்பமான பகுதிகள் செயல்படுவதை நாங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம் என கூறினார்.

அறுவை சிகிச்சைக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, டாக்மர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். 10 வயதில் இருந்து வயலின் வாசித்து வருகிறேன். ஒருவேளை என்னுடைய வயலின் வாசிப்பு திறன் இழந்திருந்தால் இதயம் நொறுங்கி போயிருக்கும் என்று தெரிவித்துள்ளார். தற்போது அவர் அறுவை சிகிச்சையில் வயலின் வாசித்த வீடியோ பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

Next Story