ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்


ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: 3 குழந்தைகளை கொன்று முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை, மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 20 Feb 2020 12:15 AM GMT (Updated: 20 Feb 2020 12:10 AM GMT)

ஆஸ்திரேலியாவின் முன்னாள் ரக்பி வீரர் தனது 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி மயிரிழையில் உயிர் தப்பினார்.

கான்பெர்ரா, 

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர் (வயது 42). நியூசிலாந்து ரக்பி வாரீயர்ஸ் அணியில் வீரராக இருந்த இவர் ரக்பி உலக கோப்பை விளையாட்டுகளில் விளையாடி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரக்பி விளையாட்டுகளில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற ரோவான், ஆஸ்திரேலியாவை சேர்ந்த உடற்பயிற்சிக்கூட பயிற்சியாளரான ஹன்னா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார்.

திருமணத்துக்கு பின்னர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் குடியேறிய ரோவான் தனது மனைவி ஹன்னாவுடன் இணைந்து உடற்பயிற்சிக்கூடம் ஒன்றை தொடங்கினார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர்களுக்கும், ரக்பி மற்றும் கால்பந்தாட்ட வீரர்களுக்கும் ரோவான் உடற்பயிற்சி வழங்கி வந்தார். ரோவான்ஹன்னா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரோவான்ஹன்னா தம்பதி பிரிந்தனர்.

அதன் பின்னர் ரோவான் தனியாக வசிக்க தொடங்கிய நிலையில், அவரது 3 குழந்தைகளும் தாய் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தன.

கணவன்-மனைவி இருவரும் பிரிந்த பிறகு அவர்கள் நடத்தி வந்த உடற்பயிற்சி கூடம் மூடப்பட்டது.

இந்த நிலையில் ஹன்னா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிஸ்பேன் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு காரில் புறப்பட்டார்.

செல்லும் வழியில் அவரது காரை வழிமறித்த முன்னாள் கணவர் ரோவான், அவருடன் பேச வேண்டுமென காரில் ஏறினார்.

கார் சென்று கொண்டிருந்தபோதே ரோவான், முன்னாள் மனைவி ஹன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஹன்னா தனது பெற்றோர் வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவுக்கு முன்னால் காரை நிறுத்தினார்.

அதன் பின்னர் அவர் ரோவானை காரில் இருந்து இறங்கும்படி கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த ரோவான் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை ஹன்னா மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றினார்.

என்ன நடக்கிறது என்று ஹன்னா சுதாரிப்பதற்குள் ரோவான் தீயை கொளுத்தினார். இதில் ஹன்னா உடலிலும், குழந்தைகள் உடலிலும் தீப்பற்றி எரிந்தது. அதன் பின்னர் ரோவான் கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டார்.

இதற்கிடையில் கார் முற்றிலுமாக கொழுந்து விட்டு எரிந்தது. அந்த வழியாக நடந்து சென்ற வாலிபர் ஒருவர் இதை பார்த்து பதறிப்போய், காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தார்.

ஆனால் அவரால் ஹன்னாவை மட்டுமே காப்பற்ற முடிந்தது. ரோவானும், 3 குழந்தைகளும் காருக்குள்ளேயே உடல் கருகி பலியாகினர். மயிரிழையில் உயிர்தப்பிய ஹன்னாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அதே போல் அவரை காப்பாற்றிய வாலிபருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆஸ்திரேலியாவை உலுக்கி உள்ளது.

இந்த கோர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் 3 குழந்தைகளை இழந்துவாடும் ஹன்னாவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Next Story