ஜெர்மனியில் அடுத்தடுத்து பயங்கரம் மதுபான விடுதிகளில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி


ஜெர்மனியில் அடுத்தடுத்து பயங்கரம் மதுபான விடுதிகளில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
x
தினத்தந்தி 21 Feb 2020 12:00 AM GMT (Updated: 20 Feb 2020 11:55 PM GMT)

ஜெர்மனியில் 2 மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் தனது தாயை சுட்டுக்கொன்றுவிட்டு தற்கொலை செய்தார்.

பெர்லின், 

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் ஹனாவ் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் மது அருந்தி கொண்டும், ஆடிப்பாடி களிப்பில் இருந்தனர்.

அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு மதுபான விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடதொடங்கினார். இதனால் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

மதுபான விடுதிக்குள் இருந்த அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அந்த நபர் வெறிபிடித்தவர் போல கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதை போல் சுட்டு தள்ளினார். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். அதனை தொடர்ந்து, அந்த மர்ம நபர் காரில் தப்பினார்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மதுபான விடுதிக்குள் காயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையே தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பி சென்ற அந்த மர்ம நபர் ஹனாவ் நகருக்கு அருகே கெசல்ஸ்டாட் என்ற இடத்தில் உள்ள மற்றொரு மதுபான விடுதிக்குள் நுழைந்து, அங்கும் துப்பாக்கி சூடு நடத்தினார்.

இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மர்ம நபர் 2-வது இடத்தில் தாக்குதல் நடத்தியது பற்றி தெரிந்ததும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் தப்பி சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து தாக்குதல் நடந்த 2 இடங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கொலையாளியை போலீசார் தேடினர்.

சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு கொலையாளியின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். 2-வது தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில மைல் தொலைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொலையாளி இருப்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து போலீசார் பெரிய படையுடன் சென்று அந்த அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்தனர். கொலையாளியின் வீட்டின் கதவை உடைத்து போலீசார் உள்ளே நுழைந்தனர்.

அங்கு வயதான ஒரு பெண்ணும், நடுத்தர வயது ஆணும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களது உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்தன.

பிணமாக கிடந்த நடுத்தர வயது ஆண்தான் மதுபான விடுதிகளில் தாக்குதல் நடத்திய நபர் என்பதும், அந்த பெண் அவரது தாய் என்பதும் தெரியவந்தது.

போலீசார் சுற்றிவளைத்ததால் பயந்துபோன கொலையாளி தனது தாயை சுட்டுக்கொன்று விட்டு, தன்னே தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

எனினும் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்காத போலீசார், தாக்குதலின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக கூறினர்.

ஒரே இரவில் அடுத்தடுத்து 2 மதுபான விடுதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் ஜெர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story