ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி


ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 21 Feb 2020 6:44 AM GMT (Updated: 21 Feb 2020 8:16 AM GMT)

ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் பலியாகினர். எப்படி தாக்கியது என தெரியாமல் அரசு திகைத்து வருகின்றது.

டெஹ்ரான், 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் நோய் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸ் சீனாவுக்கு வெளியேயும் உயிர்ப் பலிகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஈரானில் கொரோனா வைரசுக்கு 2 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குவாம் மாகாணத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர்கள் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிக்காமல் இருவரும் இறந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரும் குவாம் மாகாணத்தை விட்டு கூட வெளியே பயணம் செய்யாத நிலையில், வெளிநாட்டில் இருந்து பரவிய நோய் அவர்களை எப்படி தாக்கியது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாம் மாகாணத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story