அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்


அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கிய ‘மனித கம்ப்யூட்டர்’ கேத்தரின் ஜான்சன் மரணம்
x
தினத்தந்தி 25 Feb 2020 11:51 PM GMT (Updated: 25 Feb 2020 11:51 PM GMT)

அமெரிக்காவை சேர்ந்த பெண் கணித மேதை கேத்தரின் ஜான்சன். மனித கம்ப்யூட்டர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர், வயோதிகம் காரணமாக நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 101.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவில் 1918-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ந்தேதி ஆப்பிரிக்க வம்சாவளி குடும்பத்தில் பிறந்த கேத்தரின் ஜான்சன், சிறு வயது முதலே கணிதத்தில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார்.

அமெரிக்காவில் அப்போது நிலவிய நிறவெறி காரணமாக, கல்லூரி படிப்பை முடிப்பதில் கேத்தரின் பல சிரமங்களை எதிர்கொண்டார். எனினும் தடைகளை உடைத்தெறிந்து, கல்லூரி படிப்பை முடித்த அவர், சிறிது காலம் ஆசிரியையாக பணியாற்றினார். அதன் பின்னர் அந்த நாட்டின் விண்வெளி ஆராய்சி நிறுவனமான நாசாவில் 1953-ம் ஆண்டு கணிதவியலாளராக பணியமர்த்தப்பட்டார். இது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அக்காலத்தில் கம்ப்யூட்டர் வளர்ச்சி இல்லாததால் மனிதர்களாலேயே கடினமான கணக்குகள் எல்லாம் தயார் செய்யப்பட்டன. அவர்கள் மனித கம்ப்யூட்டர்கள்’ என்றே அழைக்கப்பட்டனர். அப்படி நாசாவின் மிகச்சிறந்த மனித கம்ப்யூட்டராக கேத்தரின் விளங்கினார். முதல் மனிதனை நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ 11 திட்டத்தில் இவரது பங்கு அளப்பரியது. அதேபோல் நாசாவின் மூன்றாவது விண்வெளி பயணமான அப்பல்லோ 13 சில கோளாறுகள் காரணமாக தோல்வியடைந்ததை அடுத்து விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்குவதில் மூளையாக செயல்பட்டார். அமெரிக்காவின் விண்வெளி கனவுகளை நனவாக்கியதில் கேத்தரின் ஜான்சனின் பங்கு நீண்ட காலம் முறையாக அங்கீகரிக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர் 2015-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவால் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஜனாதிபதி விருது வழங்கி இவர் கவுரவிக்கப்பட்டார்.

விண்வெளி துறையில் அளப்பரிய சாதனைகளை செய்து பின்னாளில் உலகறிய போற்றப்பட்ட கேத்தரின் ஜான்சனின் மறைவுக்கு நாசா இரங்கல் தெரிவித்துள்ளது.


Next Story