ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி


ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலி
x
தினத்தந்தி 27 Feb 2020 9:17 AM GMT (Updated: 27 Feb 2020 9:17 AM GMT)

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 22 பேர் பலியாகி உள்ளனர்.

தெஹ்ரான்,

சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,807 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 82 ஆயிரத்து 220 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சீனாவை தொடர்ந்து, தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது.

இதனை தொடர்ந்து நேற்று 4 பேர் பலியாகினர்.  இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.  வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 139 ஆக உயர்ந்திருந்தது.

இதேபோன்று கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றி வரும் துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.  வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story