வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவும் சீன வாத்துப்படை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 27 Feb 2020 9:49 AM GMT (Updated: 27 Feb 2020 9:49 AM GMT)

பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனா வாத்துப்படையை அனுப்ப உள்ளது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. 

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
 
இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு  படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

வெட்டுக்கிளி  படையெடுப்பை தடுப்பதற்கு  உதவுவதற்காக சீனா 1,00,000 விசேஷமாக வளர்க்கப்படும் வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறது. இதனை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்

கிழக்கு சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தில் இருந்து புதிதாக குஞ்சு பொரித்த வாத்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது.  வெட்டுக்கிளி  தாக்குதலுக்கு  இவைகள்  முன்னணி ஆயுதங்களாக இருக்கும்.

கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மோசமாக பாதிக்கப்பட்ட சிந்து, பலூசிஸ்தான் மற்றும் பஞ்சாப் மாகாணங்களுக்கு சீன விவசாய மற்றும் கிராமப்புற விவகார அமைச்சகத்தின் நிபுணர் குழுவை சீனா ஏற்கனவே அனுப்பியுள்ளது.

சீனாவிலிருந்து பாகிஸ்தான் புறப்பட வாத்து இராணுவம் தயாராக உள்ளது என்று ஜிஜியாங்கிலிருந்து நிங்போ செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

ஜி ஜியாங் வேளாண் அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியாளரான லு லிஷி, கோழிகளுடன் ஒப்பிடும்போது வாத்துகள்  வெட்டுக்கிளிகளுக்கு ஆபத்தான எதிரி. வாத்துகள் குழுக்களாக வாழ விரும்புகின்றன. கோழிகளை விட நிர்வகிக்க மிகவும் வசதியானவை. ஒரு கோழி ஒரு நாளைக்கு 70 வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம், ஒரு வாத்து 200 க்கும் மேற்பட்டவற்றை சாப்பிடலாம், இது மூன்று மடங்கு போர் திறனைக் கொண்டுள்ளது என்று விளக்கினார்.

Next Story