கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் நுழைய வெளிநாட்டினருக்கு தடை


கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் நுழைய வெளிநாட்டினருக்கு தடை
x
தினத்தந்தி 28 Feb 2020 12:15 AM GMT (Updated: 27 Feb 2020 7:38 PM GMT)

கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியாவில் நுழைய வெளிநாட்டினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரியாத், 

சீனாவில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ், அந்த நாட்டைத்தாண்டி சுமார் 40 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஏறத்தாழ 82 ஆயிரம் பேர் இந்த வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ 2,800 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் நுழைவதற்கு அந்த நாடு தற்காலிகமாக தடை விதித்து உள்ளது. பொதுவாக சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால கட்டத்தில் முஸ்லிம்கள் புனிதப்பயணம் செல்கின்றனர். இது ஹஜ் புனிதப்பயணம் என அழைக்கப்படுகிறது.

இதேபோன்று அங்கு முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளும் புனிதப்பயணம் உம்ரா ஆகும். மெதினாவில் உள்ள நபி மசூதிக்கும் முஸ்லிம்கள் புனிதப்பயணம் செல்கின்றனர்.

இந்த நிலையில்தான் சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் நுழைவதற்கு தற்காலிக தடை விதித்து அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “உம்ரா புனித பயணத்துக்காகவும், மெதினாவில் உள்ள நபி மசூதிக்கு செல்வதற்காகவும் சவுதி அரேபியாவுக்குள் நுழைவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவின் மூலம் வருகிற பயணிகளுக்கும் சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

Next Story