கொரோனா வைரஸ் பீதி: ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடல்


கொரோனா வைரஸ் பீதி: ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடல்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:30 PM GMT (Updated: 28 Feb 2020 10:54 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் ஜப்பானில் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. இதற்கான அழைப்பை அந்த நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே விடுத்துள்ளார்.

டோக்கியோ,

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய உயிர்க்கொல்லி வைரசான கொரோனா, தனது ஆதிக்கத்தை ஏறத்தாழ 40 நாடுகளுக்கு பரப்பி உள்ளது.

சுமார் 83 ஆயிரம் பேரை பாதித்துள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒரு வழியின்றி உலக நாடுகள் திணறி வருகின்றன. எல்லா நாடுகளிலும் மக்களிடம் கொரோனா வைரஸ் பீதி உள்ளது.

சீனாவில் மேலும் 44 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இங்கு அந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,788 ஆகி உள்ளது.

சீனாவைத் தாண்டி அதிக பாதிப்பை சந்தித்து வருகிற நாடுகளின் பட்டியலில் தென்கொரியா, ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜப்பானும் சேர்ந்துள்ளது.

அங்கு 210 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.

மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாக வாகயாமா மாகாணத்தை சேர்ந்த 70 வயது கடந்த ஒரு முதியவர், இந்த வைரஸ் தாக்கி பலியாகி உள்ளார்.

வருகிற ஜூலை மாதம் 24-ந் தேதி ஜப்பானில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸ் பரவி வருவது அனைத்து தரப்பினருக்கும் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.

இன்னும் 2 வாரங்களுக்குள் இந்த வைரசை கட்டுப்படுத்தாவிட்டால், ஒலிம்பிக் போட்டி நடப்பதில் சிக்கல்கள் உருவாகக்கூடும் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துள்ள பிரதமர் ஷின்ஜோ அபே, ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடங்களை மூடுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டைப் பொறுத்தமட்டில் உள்ளாட்சி கவுன்சில்கள்தான் பள்ளிக்கூடங்களை நடத்துகின்றன. எனவேதான் பள்ளிக்கூடங்களை மூடுமாறு, உள்ளாட்சி கவுன்சில்களுக்கு பிரதமர் ஷின்ஜோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அங்கு பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன.

இதற்கிடையே டோக்கியோவில் உள்ள புகழ் பெற்ற உல்லாச பொழுதுபோக்கு இடங்களான டிஸ்னி ரிசார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் ஸ்டூடியோஸ் ஆகிய 2 வாரங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 571 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அங்கு இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டி விட்டது.

இத்தாலியில் 650 பேரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. ஸ்பெயினில் 23 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முதல்முதலாக ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது. இதேபோன்று நியூசிலாந்திலும் ஒருவருக்கு முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்துள்ளார்.


Next Story