சிரியாவில் ரசாயன ஆயுதக்கிடங்கை அழித்தது துருக்கி - வீரர்களை கொன்று குவித்ததற்கு பதிலடி


சிரியாவில் ரசாயன ஆயுதக்கிடங்கை அழித்தது துருக்கி - வீரர்களை கொன்று குவித்ததற்கு பதிலடி
x
தினத்தந்தி 29 Feb 2020 9:33 PM GMT (Updated: 29 Feb 2020 9:33 PM GMT)

வீரர்களை கொன்று குவித்ததற்கு பதிலடியாக, சிரியாவில் ரசாயன ஆயுதக்கிடங்கை துருக்கி அழித்தது.

இஸ்தான்புல்,

சிரியாவில் உள்ள இத்லிப் மாகாணத்தில் துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் படைக்கும், அரசு படைக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன. அரசு படைக்கு ஆதரவாக ரஷிய படைகள் களம் இறங்கி உள்ளன.

இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சிரிய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் துருக்கி வீரர்கள் 33 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்தன. இது துருக்கிக்கு ஆத்திரத்தை ஏற்படுத் தியது. சிரியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடிவு எடுத்தது.

அந்த வகையில் சிரியாவில் அலெப்போ நகரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள அந்த நாட்டின் ரசாயன ஆயுதக்கிடங்கை துருக்கி படைகள் நேற்று முன்தினம் இரவில் அதிரடியாக தாக்குதல் நடத்தி அழித்தன. இதை துருக்கி அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார். ஆனால் சிரியாவில் உள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், கிழக்கு அலெப்போவில் உள்ள ஒரு ராணுவ விமான நிலையத்தின்மீதுதான் துருக்கி தாக்குதல் நடத்தியதாக கூறுகிறது.

இதற்கிடையே பதற்றத்தை தணிக்கிற வகையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தொலைபேசியில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த வாரம் துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன், ரஷிய அதிபர் புதினுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மாஸ்கோ செல்ல இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Next Story