மலேசிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம் - இன்று பதவி ஏற்கிறார்


மலேசிய பிரதமராக முகைதீன் யாசின் நியமனம் - இன்று பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 29 Feb 2020 11:15 PM GMT (Updated: 29 Feb 2020 9:51 PM GMT)

மலேசிய நாட்டின் பிரதமராக முகைதீன் யாசின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்கிறார்.

கோலாலம்பூர்,

மலேசிய நாட்டில் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அபார வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்தவர் மகாதீர் முகமது (வயது 94).

அந்த தேர்தலின்போது, மகாதீர் முகமதுவுக்கும், மற்றொரு முக்கிய தலைவரான அன்வர் இப்ராகிமுக்கும் இடையே ஒரு உடன்பாடு இருந்தது. வயது முதிர்ந்த நிலையில் மகாதீர் முகமது பதவி விலகுகிறபோது, பிரதமர் பதவி அன்வருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். அவர்தான் மகாதீர் முகமதுவின் வாரிசு என்று கூறப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் மகாதீர் முகமது கடந்த 24-ந்தேதி திடீரென பிரதமர் பதவியை விட்டு விலகினார். அதைத்தொடர்ந்து அவரது ராஜினாமாவை மன்னர் சுல்தான் அப்துல்லா ஏற்றுக்கொண்டார். அத்துடன் அவரை இடைக் கால பிரதமராக தொடரும்படியும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப்பேசி தானே அடுத்த பிரதமரை தேர்வு செய்யப்போவதாக மன்னர் சுல்தான் அப்துல்லா அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஆனாலும் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வந்தது.

தான் அறிவித்தபடியே நாடாளுமன்ற உறுப்பினர் களை அழைத்துப்பேசியதாகவும், அதில் எல்லோரின் ஆதரவையும் பெற்ற ஒருவரை பிரதமராக அடையாளம் காண முடியவில்லை என்றும் மன்னர் சுல்தான் அப்துல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை மார்ச் 2-ந்தேதி கூட்டி, அதில் ஓட்டெடுப்பு நடத்தி புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என இடைக்கால பிரதமர் மகாதீர் முகமது அறிவித்தார்.

ஆனால் இப்படி அறிவிக்க இடைக்கால பிரதமருக்கு அதிகாரம் இல்லை என்ற சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு மகாதீர் முகமதுவின் மலேசிய ஐக்கிய சுதேச கட்சியின் தலைவர் முகைதீன் யாசினுக்கும், அன்வர் இப்ராகிமுக்கும் இடையே நேரடி போட்டி நிலவி வந்தது.

இதற்கிடையே மகாதீர் முகமதுவும் மீண்டும் பிரதமர் பதவியை பிடிக்க ஆசைப்பட்டார்.

இருவரில் முகைதீன் யாசினைப் பொறுத்தமட்டில் அவர் 57 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளான தேசிய முன்னணி கூட்டணி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவற்றின் ஆதரவை பெற்று விட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை மலேசியாவின் அடுத்த பிரதமராக மன்னர் சுல்தான் அப்துல்லா நேற்று நியமனம் செய்தார்.

இதை முகைதீன் யாசின் ஏற்றுக்கொண்டு விட்டார்.

இதையொட்டி, அவர் கோலாலம்பூரில் நிருபர்கள் மத்தியில் பேசுகையில், “நாட்டு நலனையும், மக்கள் நலனையும் முன்னிட்டு அரண்மனை வெளியிட்டுள்ள முடிவை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். நாட்டை தலைமை தாங்கி வழிநடத்திச்செல்வதற்கு என்னை தேர்வு செய்ததற்கு மன்னருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என குறிப்பிட்டார்.

இதன்மூலம் அன்வர் இப்ராகிம் பிரதமர் வாய்ப்பு பறிபோய் விட்டது. மீண்டும் பிரதமராக கணக்கு போட்ட மகாதீர் முகமதுவின் ஆசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

அன்வர் இப்ராகிமைப்போலவே முகைதீன் யாசினும் மலேசியாவில் துணைப்பிரதமர் பதவி வகித்தவர் ஆவார். இவர் 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை நஜிப் அரசில் துணைப்பிரதமர் பதவி வகித்தார். இவர் அப்போது நஜிப்பின் ஊழலை விமர்சித்ததால் பதவி பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாதீர் முகமதுவுடன் கை கோர்த்தார். பெர்சாட்டு கட்சி தொடங்கப்பட்டது. அந்த கட்சி 63 ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் மலேசியாவின் 8-வது பிரதமராக முகைதீன் யாசின் பதவி ஏற்றுக்கொள்கிறார். இதன்மூலம் மலேசியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வருகிறது.


Next Story