அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார்?


அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார்?
x
தினத்தந்தி 4 March 2020 11:56 PM GMT (Updated: 4 March 2020 11:56 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டிரம்பை எதிர்த்து களமிறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வா‌ஷிங்டன்,

அமெரிக்காவில் நவம்பர் 3-ந்தேதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களம்காணும் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி தரப்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், செனட் சபை எம்.பி. பெர்னீ சாண்டர்ஸ், நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க், எலிசபெத் வாரன் என பலரும் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களம்காண விரும்புகின்றனர்.

இந்த நிலையில், டிரம்பை எதிர்க்கும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அமெரிக்க மாகாணங்களில் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த 4 மாகாண தேர்தலில் அயோவா, நியூஹாம்ப்‌‌ஷயர், நெவேடா ஆகிய 3 மாகாணங்களில் பெர்னீ சாண்டர்ஸ் வெற்றி பெற்றார். ஆனால் பெரிய மாநிலமான தெற்கு கரோலினாவில் ஜோ பிடென் வெற்றி பெற்றார்.

மேலும், நேற்று முன்தினம் ‘சூப்பர் டியூஸ்டே’ நாளில் அலபாமா, ஆர்கன்சாஸ், கொலராடோ, கலிபோர்னியா, மைனே, மசாசூசெட்ஸ், மின்னசோட்டா, வடக்கு கரோலினா, ஓக்லஹோமா, டென்னிசி, டெக்சாஸ், உட்டா, வெர்மாண்ட் மற்றும் வர்ஜீனியா ஆகிய 14 மாகாணங்களில் ஜனநாயக கட்சி தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் டெக்சாஸ், வடக்கு கரோலினா, மசாசூசெட்ஸ், மின்னசோட்டா, ஓக்லஹோமா, ஆர்கன்சாஸ், அலபாமா, டென்னிசி, வர்ஜீனியா ஆகிய 9 மாகாணங்களில் ஜோ பிடென் அசத்தலாக வெற்றி பெற்றிருக்கிறார்.

வெர்மாண்ட், கொலராடோ, உட்டா மாகாணங்களில் பெர்னீ சாண்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். கலிபோர்னியாவில் வெற்றி முகத்தில் உள்ளார். மைனே மாகாணத்தில் இருவருக்கு இடையே நீயா, நானா என்கிற அளவுக்கு ஒருவரை ஒருவர் மாறி மாறி முந்துகின்றனர்.

இதன்மூலம் டிரம்பை எதிர்ப்பதில் ஜனநாயக கட்சியில் நிலவி வந்த பலமுனை போட்டி முடிவுக்கு வருகிறது. டிரம்பை எதிர்த்து போட்டியிடப்போவது, ஜோ பிடெனா அல்லது பெர்னீ சாண்டர்ஸா என்ற கேள்விதான் இப்போது எழுந்துள்ளது.


Next Story