“மோனிகா லெவின்ஸ்கி விவகாரம், கவலைகளை மறக்க வழிகாட்டியது” - கிளிண்டன் மனம் திறக்கிறார்


“மோனிகா லெவின்ஸ்கி விவகாரம், கவலைகளை மறக்க வழிகாட்டியது” - கிளிண்டன் மனம் திறக்கிறார்
x
தினத்தந்தி 7 March 2020 9:41 PM GMT (Updated: 7 March 2020 9:41 PM GMT)

மோனிகா லெவின்ஸ்கி விவகாரம், கவலைகளை மறக்க வழிகாட்டியது என்று கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை பற்றி ‘ஹிலாரி’ என்ற தலைப்பில் ஆவண தொடர் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது.

இதில் ஹிலாரியின் கணவரும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டன் மனம் திறந்து பேசி இருக்கிறார். வெள்ளை மாளிகையில் பணியாற்றிய 22 வயது பெண்ணான மோனிகா லெவின்ஸ்கியுடன் தான் செக்ஸ் உறவு வைத்துக்கொண்ட விவகாரம் பற்றியும் அதில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் கூறியதாவது:-

நான் செய்த காரியம் மிகவும் மோசமானது. நான் நினைத்தது போல அது இல்லை. நான் செய்த மிகவும் முட்டாள்தனமான செயல் அது. எல்லோருக்கும் வாழ்க்கையில் அழுத்தங்களும், ஏமாற்றங்களும், பயங்கரங்களும், அச்சங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. நான் பல்லாண்டு காலம் என் கவலைகளை மறக்க அது (மோனிகா லெவின்ஸ்கி விவகாரம்) வழியாக அமைந்தது.

இந்த விவகாரத்தை எங்கள் மகள் செல்சியிடம் சொல்ல வேண்டியநிலை வந்தது மிக மோசமான அனுபவம்.

இவ்வாறு அதில் கிளிண்டன் கூறி உள்ளார்.

இந்த விவகாரத்தில் ஹிலாரி கூறும்போது, “இந்தப் பிரச்சினையால், தனிப்பட்ட முறையில் நான் மிகவும் வேதனை அடைந்தேன். அதை என்னால் நம்ப முடியவில்லை. அதிலும் நீங்கள் (கிளிண்டன்) பொய் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. அது பயங்கரமானது. இது வெளியுலகுக்கு தெரியப்போகிறது என்றால் நீங்கள் செல்சியிடம் போய் சொல்ல வேண்டும் என்று சொன்னேன். இந்த விவகாரம் வெளியே வந்தபோது, அவரை (கிளிண்டனை) நான் எதுவும் செய்ய விரும்பவில்லை. நான் என் கணவருடனேயே இருக்க முடிவுசெய்தேன். நான் சரியான முடிவை எடுத்ததாக பலரும் நினைத்தனர். இன்னும் சிலரோ நான் எடுத்தது தவறான முடிவு என கருதினர்” என்று கூறினார்.

மோனிகா லெவின்ஸ்கியுடனான செக்ஸ் உறவை முதலில் கிளிண்டன் மறுத்ததும், என் சம்மதத்துடன்தான் அவர் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் என்று மோனிகா லெவின்ஸ்கி சொன்னதும், அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.


Next Story