‘பேஸ்புக்’கில் முகக்கவச விளம்பரங்களுக்கு தடை


‘பேஸ்புக்’கில் முகக்கவச விளம்பரங்களுக்கு தடை
x
தினத்தந்தி 8 March 2020 11:07 PM GMT (Updated: 8 March 2020 11:07 PM GMT)

‘பேஸ்புக்’கில் முகக்கவச விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்,

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலகநாடுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பல நாடுகளில் முகக்கவசங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில், மருத்துவ முகக்கவசங்களை விளம்பரம் செய்வதற்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது. மக்களின் அச்சத்தை பயன்படுத்தி வணிகர்கள் சிலர், லாப நோக்கத்தில் முகக்கவசம் விற்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ‘பேஸ்புக்’ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா அச்சுறுத்தலை உற்று கவனித்து வருகிறோம். உலகம் முழுவதும் நிலவி வரும் அச்சத்தை பயன்படுத்தி சிலர் விளம்பரம் தொடர்பான விதிகளை மீறி வருகின்றனர். எனவே மருத்துவ முகக்கவசங்களை விளம்பரப்படுத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story