ஆப்கானிஸ்தான் அதிபராக 2வது முறையாக அஷ்ரப் கனி பதவியேற்பு


ஆப்கானிஸ்தான் அதிபராக 2வது முறையாக அஷ்ரப் கனி பதவியேற்பு
x
தினத்தந்தி 9 March 2020 1:24 PM GMT (Updated: 9 March 2020 1:24 PM GMT)

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக 2வது முறையாக அஷ்ரப் கனி பதவியேற்று கொண்டார்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபராக அஷ்ரப் கனி இருந்து வருகிறார்.  கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றார்.  இதனை தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அஷ்ரப் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு தலைவர்கள், தூதர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர் கடவுளின் பெயரால் பதவி பிரமாணம் எடுத்து கொண்டார்.  புனித மதம் இஸ்லாமிற்கு கீழ்படிவதுடன், அதனை பாதுகாப்பேன்.  அரசியல் சாசனத்திற்கு மரியாதை செலுத்தி அதனை அமல்படுத்துவதற்கான மேற்பார்வை பணிகளையும் செய்வேன் என கூறி பதவியேற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சி நடந்து சில நிமிடங்களில், தேர்தலில் கனியை எதிர்த்து போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா தனது ஆதரவாளர்களுடன் மற்றொரு அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி அதில் தன்னை அதிபராக அறிவித்து கொண்டார்.

இதனால் தலீபான் தீவிரவாதிகளுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் நெருக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது.  அஷ்ரப் கனி பதவியேற்பு விழாவின்பொழுது குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு ஆகிய சம்பவங்கள் நடந்துள்ளன என கூறப்படுகிறது.  இதுபற்றிய காட்சிகள் கொண்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.

Next Story