பிரான்சில் விமான நிலைய தலைவருக்கு கொரோனா பாதிப்பு


பிரான்சில் விமான நிலைய தலைவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 March 2020 11:16 PM GMT (Updated: 9 March 2020 11:16 PM GMT)

பிரான்சில் விமான நிலைய தலைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸ்,

பிரான்சில் கொரோனா வைரசுக்கு 19 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அங்கு 1,100-க்கும் அதிகமானோர் இந்த வைரசின் பிடியில் சிக்கி உள்ளனர். இதில் முக்கியமாக தலைநகர் பாரீசில் உள்ள 2 சர்வதேச விமான நிலையங்களை இயக்கி வரும் குரூப்பே ஏ.டி.பி. நிறுவனத்தின் தலைவர் அகஸ்டின் தெ ரோமனெட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார்.

அவரது உடல்நிலை கவலைக்குரிய நிலையில் இல்லை என்பதால், வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், எனினும் தனது வீட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் பிறப்பிடம், சீனாவின் உகான் நகராகும். இதனால் அந்த வைரசை ‘உகான் வைரஸ்’ என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறினார். இதற்கு சீனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுவாங் கூறுகையில், ‘கொரோனா வைரசுக்கு ‘கோவிட்-19’ என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பெயரிட்டு உள்ளது. ஆனால் அறிவியலையும், உலக சுகாதார அமைப்பையும் நம்பாமல் குறிப்பிட்ட சில அமெரிக்க மந்திரிகள் கண்மூடித்தனமாக இருக்கின்றனர். கொரோனா வைரசின் போர்வையில் சீனாவையும், உகானையும் களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர். இது ஒரு இழிவான நடத்தை’ என்று தெரிவித்தார்.

ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் தனது ‘எக்ஸ்ட்ரேக்‌ஷன்’ நெட்பிளிக்ஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இயக்குனர் சாம் ஹர்க்ரேவுடன் 2 நாள் பயணமாக வருகிற 16-ந்தேதி இந்தியா வருவதாக இருந்தார். ஆனால் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறுகையில், ‘அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், அரசுகளின் பயணத்தடையை முன்னிட்டும் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் பங்கேற்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது’ என்று தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் மக்கள் திரள் கூட்டங்களை ரத்து செய்யவோ, ஒத்தி வைக்கவோ வேண்டும் என மத்திய அரசும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதை தடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதைப்போல பல்வேறு அரசு அமைப்புகளும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன.

அந்தவகையில் டெல்லி ஐகோர்ட்டு வளாகத்தில் தேவையின்றி மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என வக்கீல்களுக்கும், வழக்குதாரர்களுக்கும் ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டு பதிவாளர் ரமேஷ் சந்த் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.


Next Story