கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி


கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலி
x
தினத்தந்தி 11 March 2020 11:30 PM GMT (Updated: 11 March 2020 10:38 PM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் பலியாகி உள்ளனர்.

ரோம்,

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு நேற்று வரை உலகம் முழுவதும் 4,270 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 129 பேருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.

சீனாவில் மட்டும் 3,158 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 878 ஆக உள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 ஆயிரத்து 492 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சீனா தவிர பிற நாடுகளில் மட்டும் புதிதாக 4,105 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற நாடுகளில் இந்த தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 778 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக தற்போது இத்தாலி மற்றும் ஈரானில் கொரானா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலியில் நேற்றுமுன்தினம் வரை 463 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 168 பேர் பலியாகினர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்தது. பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் ஆவர்கள்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இத்தாலி பிரதமர் சியூசெப் கோண்டே உத்தரவிட்டார். அதன்படி மருத்துவம் மற்றும் பிற முக்கிய பணிகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் 31 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்காக அங்குள்ள 11 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜப்பானிலும் கொரோனா வைரசால் 31 பேர் பலியாகி உள்ளனர். 568 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது.

சீனாவுக்கு அடுத்த படியாக முதலில் தென்கொரியா நாட்டில்தான் கொரோனா வைரஸ் கால் பதித்து வேகமாக பரவியது. கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்று பரவுவது அங்கு கட்டுக்குள் இருந்து வந்தது.

இந்தநிலையில் 5 நாட்களுக்கு பிறகு அதிகப்படியாக நேற்று 242 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் 7 பேர் வைரஸ் தாக்குதலால் பலியாகினர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆகவும், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7,755 ஆகவும் உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடர்ந்து வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும், கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவ தொடங்கிய ஹுபெய் மாகாணம் உகான் நகரில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் உகான் நகரில் தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் பணியை தொடங்கலாம் என்று ஹுபெய் மாகாண அரசு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நகரம் தொற்று நோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்று இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் 20-ந்தேதிக்கு பிறகு அங்கு மீண்டும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிபர் ஜின்பிங் நேற்றுமுன்தினம் ஹுபெய் மாகாணத்தையும், உகான் நகரையும் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story