நைஜீரியாவில் கியாஸ் ஆலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி


நைஜீரியாவில் கியாஸ் ஆலையில் பயங்கர தீ விபத்து: 17 பேர் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 17 March 2020 12:15 AM GMT (Updated: 17 March 2020 12:30 AM GMT)

நைஜீரியாவில் கியாஸ் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா, 

நைஜீரியாவின் லாகோஸ் மாகாணம் அபுலே அடோ நகரில் கியாஸ் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு வெளியே ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

நேற்று முன்தினம் காலை இந்த தொழிற்சாலைக்கு வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கியாஸ் சிலிண்டர்கள் மீது மோதியது. இதில் கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

இதன்காரணமாக தொழிற்சாலையில் இருந்த கியாஸ் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, பயங்கர தீவிபத்து நேரிட்டது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு பரவியது.

இதில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பெண்கள் கல்லூரி, மாணவிகளுக்கான விடுதி, ஓட்டல் மற்றும் வீடுகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன.

இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் கல்லூரி மாணவிகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக விளங்கும் நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கியாஸ் குழாய் வெடிப்புகள், எரிபொருள் ஏற்றிச்செல்லும் லாரிகள் வெடித்து விபத்துக்குள்ளாவது போன்றவை அடிக்கடி நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story