சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தகவல்


சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக டிரம்ப் தகவல்
x
தினத்தந்தி 17 March 2020 9:37 PM GMT (Updated: 17 March 2020 9:37 PM GMT)

சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி டிரம்ப் நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார்.

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கொரோனா வைரஸ் குறித்து மேலும் அறியவும், வைரஸ் பரிசோதனைக்கு பதிவு செய்ய மக்களுக்கு உதவும் வகையிலும் அமெரிக்க அரசுக்காக பிரத்யேக வலைத்தளம் ஒன்றை கூகுள் நிறுவனம் உருவாக்கி இருப்பதாக அவர் அறிவித்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் கூகுள் நிறுவனம் இந்த தகவலை மறுத்தது. டிரம்ப் கூறுவதை போல எந்தவொரு வலைத்தளத்தையும் தாங்கள் உருவாக்கவில்லை என கூகுள் நிறுவனம் கூறியது. அதே சமயம் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் குழுமத்தில் ஒரு அங்கமாக விளங்கும் வெர்லி அமைப்பு இது போன்ற வலைத்தளத்தை உருவாக்கி இருப்பதாகவும், அந்த வலைத்தளம் கலிபோர்னியா மாகாணத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே செயல்பாட்டில் இருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்த வலைத்தளம் குறித்த குழப்பங்கள் அனைத்தும் போலி ஊடகங்களால் ஏற்பட்டதாக கூறினார். மேலும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கோரியதாக அவர் குறிப்பிட்டார். எனினும் எதற்காக அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை.

அதே சமயம் கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சை மரியாதைக்குரிய நபர் என்றும் சிறந்த மனிதர் என்றும் அவர் கூறினார்.


Next Story