உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 862 பேர் பலி


உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 862 பேர் பலி
x
தினத்தந்தி 17 March 2020 11:30 PM GMT (Updated: 17 March 2020 9:57 PM GMT)

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு நேற்று ஒரே நாளில் 862 பேர் பலியானார்கள்.

மாஸ்கோ,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது. நேற்று ஒரே நாளில் ஒரு இந்தியர் உள்பட 862 பேர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 873 ஆக அதிகரித்தது.

கொரோனா தோன்றிய உகான் நகரில் அதன் வீரியம் குறைந்து வருகிறது. நேற்று கூடுதலாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கியது. ஆனால், சீனா முழுவதும் மேலும் 13 பேர் பலியானார்கள்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் உலக நாடுகள் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், கிர்கிஸ்தான் நாடு, வெளிநாட்டினர் வருகைக்கு தடை விதித்துள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை ‘போர்’ என்று வர்ணித்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் 15 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். பிரான்சில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோல், வெனிசுலா நாட்டில் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மடுரோ அறிவித்துள்ளார்.

ஐரோப்பா கண்டத்துக்குள் பிற நாட்டினர் அத்தியாவசியம் இல்லாத பயணங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்க ஐரோப்பா முடிவு செய்துள்ளது. எல்லைகளை மூட திட்டமிட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பிராந்தியத்தில் உள்ள 4 சிறைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எதிர்த்து 1,500 கைதிகள் தப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டில் பஸ், ரெயில், விமான சேவைகள் இன்று (புதன் கிழமை) முதல் ரத்து செய்யப்படுகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டுள்ளது.


Next Story