ஈராக்கில் சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் விலகல்


ஈராக்கில் சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் விலகல்
x
தினத்தந்தி 18 March 2020 11:24 PM GMT (Updated: 18 March 2020 11:24 PM GMT)

ஈராக்கில் சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப்படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன.

பாக்தாத்,

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் முகாமிட்டன. பெரும்பாலான ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்க கூட்டுப்படைகள் அழித்தன. ஆனால் சமீப காலமாக அங்குள்ள அமெரிக்க தளங்கள் மீது ராக்கெட் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 11-ந் தேதி தாஜி என்ற இடத்தில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.

கடந்த 16-ந் தேதி பாக்தாத் நகருக்கு தெற்கே அமைந்துள்ள அமெரிக்க தளத்தின்மீது ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதில் உயிரிழப்பு நேர்ந்ததாக தகவல் இல்லை. இந்த நிலையில் ஈராக்கை சுற்றிலும் அமைந்துள்ள சிறிய தளங்களில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் விலக்கி கொள்ளப்படுகின்றன.

சிரியா எல்லை அருகே அமைந்துள்ள அல் யாயிம் படைத்தளத்தில் இருந்தும் அமெரிக்க கூட்டுப்படைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து அந்த படைத்தளம், ஈராக் வசம் ஒப்படைக்கப்பட்டது. இங்கிருந்த படை வீரர்கள் நாட்டின் ஒருங்கிணைந்த தளங்களுக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.


Next Story