வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லையா உண்மை நிலை என்ன?


வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லையா உண்மை நிலை என்ன?
x
தினத்தந்தி 21 March 2020 11:52 AM GMT (Updated: 21 March 2020 11:52 AM GMT)

உலகமே கொரோனா வைரஸ் பரவலுக்கு அலறி கொண்டு இருக்கும் நிலையில் எங்கள் நாட்டில் கொரோனா இல்லை என ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது வடகொரியா

லண்டன்

அண்டை நாடான வட சீனாவில் கொரோனாவுக்கு 3,500க்கு மேற்பட்டவர்கள்  உயிரிழந்துள்ள நிலையில், வட கொரியா தங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை என ஜம்பமடித்து வருகிறது. ஆனால், சில நிபுணர்கள் அது உண்மையில்லை என்று கூறுகின்றனர். 

வட கொரியாவில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் வட கொரியா குறித்த விஷயங்களை ஆராயும் முன்னாள் சிஐஏ நிபுணரான ஜங் எச் பாக்.வட கொரியாவின் பொருளாதாரம், மனித உரிமைகள் மீறல் மற்றும் பிற குற்றச்செயல்களிலிருந்து உலகின் கவனத்தை திசை திருப்பவே கிம் இப்படி வழக்கம்போல ஜம்பமடித்துக் கொள்கிறார் என்கிறார் அவர்.

தற்போது உலகமே கொரோனா வைரசால் கடும் அச்சத்தில் இருக்கும் சூழலில் வடகொரியா கடந்த  சில தினங்களுக்கு முன்  குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சோதித்தது. இது கொரோனாாவால் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், சிறிய ரக ஏவுகணைகள் சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியாங் மாகாணத்தில் கிழக்கு கடல் பகுதியில் 2 சிறிய ரக ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்ததாக  கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே கொரோனா பரவலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வரும் நிலையில், தங்கள் நாட்டில் வைரஸ் தொற்றால் எவரும் பாதிக்கப்படவில்லை என வடகொரியா அறிவித்ததன் உண்மை என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

சீனா, ரஷ்யா, தென்கொரியாவை அடுத்துள்ள நாடு வடகொரியா. இது தென்கொரியாவைவிட அதிக பரப்பளவை கொண்டிருந்தாலும் இங்கு மக்கள் தொகை குறைவே.

பொதுவாகவே வெளி உலகுடன் எந்தவிதமான தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் தனிமையிலேயே இருந்துவரும் வடகொரியாவில், சுற்றுலா பயணிகள், வர்த்தகத்திற்காக அங்கு செல்பவர்கள் அனைவரும் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனால் அந்நாட்டிற்கு பயணம் செய்யக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் வெகு குறைவே.

கொரோனா வைரஸின் பூர்வீகமான சீனாவும், வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்றான தென்கொரியாவும் வடகொரியாவுடன் எல்லையை பகிர்கின்றன.

இப்படி இருக்கையில் இங்கு எப்படி வைரஸ் பரவாமல் இருக்கும் என்ற கேள்வி எழுந்த நிலையிலும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை வடகொரியா வெளியிடவில்லை. வெளியுலகுடனான தொடர்பை துண்டித்ததால் தங்கள் நாடு வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்பட்டதாகவும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வடகொரியா கூறுகிறது.

அதற்கு காரணம் தங்கள் நாட்டு எல்லைகளை ஜனவரியில் இருந்தே முழுமையாக அடைத்து விட்டதாகவும், அண்டை நாடுகளுடனான ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை முற்றிலும் தடை செய்துவிட்டதாகவும் வடகொரியா சொல்கிறது.

மட்டுமின்றி நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் மீதான பயம் காரணமாக அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் வடகொரியாவில் கட்டாயம் இந்த வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அந்நாட்டிற்கான அமெரிக்காவின் ராணுவ கமாண்டர் ஜெனரல் ராபர்ட் அப்ரம்ஸ் தெரிவிக்கிறார்.

கடந்த ஒரு மாதமாக வடகொரியாவில் ராணுவ நடவடிக்கைகள் குறைந்து வீரர்களின் நடமாட்டமே இல்லாமல் இருந்தது, ஒரு மாதத்தில் ஒரு விமானம் மட்டுமே பறந்தது என இப்பகுதியை கண்காணிக்கும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

 சீனா சென்று வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வடகொரிய அரசு தனிமைப்படுத்தியதாகவும்,மீறி பொது இடத்துக்கு சென்ற ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கடந்த பிப்ரவரியில் தகவல்கள் வந்தன. வடகொரிய அரசு இதுவரை கொரோனா பரவல் குறித்து அதிகாரபூர்வமாக பேசவில்லை. இதனால் ஊடகங்கள் வட கொரியாவின் உண்மை நிலை என்னவென்று இதுவரை உலக மக்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

Next Story