ஆப்கானிஸ்தானில் கடும் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் உள்பட 7 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் கடும் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 21 March 2020 9:59 PM GMT (Updated: 21 March 2020 9:59 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சண்டையில், 3 பயங்கரவாதிகள் உள்பட 7 பேர் பலியாகினர்.

காபூல்,

தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, கடந்த மாத இறுதியில் சமரச ஒப்பந்தம் செய்து கொண்டது. அடுத்த கட்டமாக ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான் பயங்கரவாதிகள் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தலீபான் பயங்கரவாதிகள் மறுத்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை ஜாபுல் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், கபிசா மாகாணத்தின் நிஜ்ராப் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு சோதனை சாவடி மீது நேற்று அதிகாலையில் தலீபான் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரசு சார்பு போராளிகள் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்பினர் இடையேயும் 2 மணி நேரம் பலத்த துப்பாக்கிச்சண்டை நடந்தது.

அதன் முடிவில் ஆப்கானிஸ்தான் அரசு சார்பு போராளி படையினர் 4 பேர் பலியாகினர். தலீபான் பயங்கரவாதிகள் 3 பேர் உயிரிழந்தனர். அரசு சார்பு போராளி ஒருவர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடப்பதாக மாகாண போலீஸ் செய்தி தொடர்பாளர் அப்துல் கரீம் ஷாயெக் தெரிவித்தார்.


Next Story