நைஜீரியாவில் 26 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி


நைஜீரியாவில் 26 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி
x
தினத்தந்தி 23 March 2020 12:29 AM GMT (Updated: 23 March 2020 12:29 AM GMT)

நைஜீரியாவில் ராணுவவீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அபுஜா, 

ஆப்பிரிக்க நாடானா நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு, கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் இந்த பயங்கரவாதிகள் நைஜீரியாவின் அண்டை நாடுகளான நைஜர், சாத் ஆகிய நாடுகளிலும் காலூன்றி பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர்.

இவர்களின் கொட்டத்தை ஒடுக்க ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றன.

இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கட்சினா மற்றும் ஜம்பாரா மாகாணங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக அந்த நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அந்த 2 மாகாணங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது.

கட்சினா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்தனர்.

அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இதையடுத்து, ராணுவவீரர்கள் உடனடியாக அவர்களுக்கு தக்கபதிலடி கொடுத்தனர்.

இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதே சமயம் இந்த மோதலில் ராணுவவீரர்கள் தரப்பில் உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இ்ல்லை.

அதே போல் ஜம்பாரா மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ராணுவ வீரர்களின் அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

Next Story