கொரோனா பீதி; பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்


கொரோனா பீதி; பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்
x
தினத்தந்தி 23 March 2020 12:33 AM GMT (Updated: 23 March 2020 12:33 AM GMT)

கொரோனா பீதிக்கு மத்தியில் பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் லண்டனில் இருந்து நாடு திரும்பினார்

இஸ்லாமாபாத், 

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சகோதரரும் பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருமான ஷாபஸ் ஷெரீப் அவருடன் லண்டனில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் பாகிஸ்தான் நாடு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டி உள்ளது.

நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் தடைவிதித்தது. இந்த தடை 14 நாட்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஷாபஸ் ஷெரீப் நேற்று லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறதா என்று சோதிக்கப்பட்டது.

பின்னர் அவர் தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் தான் நாடு திரும்பியதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அவர் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

Next Story