உலக அளவில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா


உலக அளவில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய கொரோனா
x
தினத்தந்தி 23 March 2020 11:36 PM GMT (Updated: 23 March 2020 11:36 PM GMT)

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். இதில் ஐரோப்பாவை சேர்ந்தவர்களே அதிகம் பலியாகி இருக்கின்றனர்.

பாரீஸ்,

மனித குலத்துக்கு மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மக்கள் கொத்துக்கொத்தாக செத்து மடியும் கொடூரமும், கூண்டோடு தொற்றுக்கு உள்ளாகும் அவலமும் இந்த வைரசின் வீரியத்தை நாள்தோறும் உலகுக்கு உணர்த்தி வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய இந்த வைரஸ் சுமார் 3 மாதங்களுக்குள் ஒட்டுமொத்த உலகிலும் ஆயிரக் கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. இந்த வைரசை அழிக்கவோ, தடுக்கவோ மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால், வைரஸ் பரவலின் தீவிரத்தை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திண்டாடி வருகின்றன.

இத்தகைய கொடிய இந்த வைரஸ் இதுவரை பலி வாங்கிய மக்களின் எண்ணிக்கை உலக அளவில் நேற்று 16 ஆயிரத்தை கடந்தது. இதில் அதிகபட்சமாக இத்தாலியில் மட்டுமே 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மொத்த எண்ணிக்கையில் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தற்போது புதிய உள்நாட்டு நோயாளிகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் மேலும் 39 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறு வந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தற்போது 353 ஆகி விட்டது.

இதைப்போல சீனாவில் பலி எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அங்கு மேலும் 9 பேர் உயிரிழந்ததன் மூலம் பலி எண்ணிக்கை 3,270 ஆக உயர்ந்து விட்டது.

நியூசிலாந்தில் கொரோனா தாக்கியவர்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும் நிலையில் அங்கு ஒரு மாதத்துக்கு நாடு தழுவிய தனிமைப்படுத்தலை பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் அறிவித்து உள்ளார். எனினும் பல்பொருள் அங்காடிகள், ஆஸ்பத்திரிகள், மருந்தகங்கள், சேவை நிலையங்கள் போன்ற அத்தியாவசிய பணிகள் நடைபெறும் எனவும் அவர் கூறினார்.

உலக அளவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணங்களில் இருக்கும் சுவிட்சர்லாந்து மக்கள் நாடு திரும்புமாறு அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது. சுவிட்சர்லாந்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, சுமார் 60 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் செக் குடியரசில் தலா ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் நிலையில், இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தலா ஆயிரத்தை கடந்து உள்ளது. ருமேனியாவில் மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலியானதன் மூலம் நாட்டில் மொத்த சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துவிட்டது.


Next Story