நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்


நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு - பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்
x
தினத்தந்தி 27 March 2020 12:24 AM GMT (Updated: 27 March 2020 12:24 AM GMT)

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வெலிங்டன், 

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை பேஸ்புக் கில் நேரலையில் ஒளிபரப்பினார்.

நாட்டையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என்பதை அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா உறுதி செய்தார். இந்த தாக்குதல் நியூசிலாந்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதற்கிடையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பிரெண்டன் டாரண்ட் நிராகரித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து வைத்த நீதிபதி பிரெண்டன் டாரண்டை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒட்டுமொத்த நியூசிலாந்தும் முடக்கப்பட்டுள்ள நிலையில், கிறைஸ்ட்சர்ச் துப்பாக்கி சூடு வழக்கு விசாரணைக்கு வந்தது. கிறைஸ்ட்சர்ச் நகர கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கொரோனா அச்சுறுத்தலால் நீதிபதிகள் மற்றும் வக்கீல்களை தவிர பொதுமக்கள் யாரும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

அதே போல் பிரெண்டன் டாரண்டையும் நேரடியாக கோர்ட்டுக்கு அழைத்து வராமல் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வக்கீல்களும் காணொலி காட்சி மூலமாகவே ஆஜராகி வாதாடினர்.

விசாரணையின் போது பிரெண்டன் டாரண்ட் தன் மீதான கொலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதே போல் 40 பேரை சுட்டுக்கொல்ல முயன்றதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் பிரெண்டன் டாரண்டை நீதிபதிகள் குற்றவாளி என அறிவித்தனர்.

கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள கோர்ட்டு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவருக்கான தண்டனை வழங்கும் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் மே 1-ந்தேதி வரை பிரெண்டன் டாரண்டை காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story