இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு


இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 11:48 AM GMT (Updated: 27 March 2020 11:48 AM GMT)

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

லண்டன்,

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஈரான் ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர்.  இதற்கு பல நாட்டு அரசியல் தலைவர்களும் இலக்காகி உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டு இளவரசர் சார்லசும் (வயது 71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வைரஸ் அறிகுறி காணப்பட்டதால் அபெர்தீன்ஸ்ஹையரில் உள்ள தேசிய சுகாதார பணிகள் குழுவினர் சார்லசுக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.

இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும், அவர் தொடர்ந்து ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பதாகவும் அவரது கிளாரன்ஸ் ஹவுஸ் மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் ஸ்காட்லாந்தில் தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர் வைக்கப்பட்டு உள்ளார்.

இங்கிலாந்து  இளவரசருக்கு தொற்று உறுதியான நிலையில், அந்நாட்டு பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது இங்கிலாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story