கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடம் பிடித்தது; செயற்கை சுவாச கருவிகள், முக கவசங்களுக்கு தட்டுப்பாடு


கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடம் பிடித்தது; செயற்கை சுவாச கருவிகள், முக கவசங்களுக்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 27 March 2020 11:45 PM GMT (Updated: 27 March 2020 11:37 PM GMT)

சீனாவையும், இத்தாலியையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. அங்கு செயற்கை சுவாச கருவிகள், முக கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், அமெரிக்காவை ஆட்டுவிக்கத்தொடங்கி உள்ளது. அங்கு பிற எந்த உலக நாடுகளை காட்டிலும் விரைவாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

அமெரிக்காவில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நிலவரப்படி, 82 ஆயிரத்து 153 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தோன்றிய சீனாவில், இதன் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 340 ஆக உள்ளது. இத்தாலியில் 86 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

இவ்விரு நாடுகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அமெரிக்கா இப்போது 93 ஆயிரத்துக்கு மேற்பட்ட நோயாளிகளுடன், முதல் இடத்தில் உள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்க நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,384 ஆக உள்ளது.

நியூயார்க் மாகாணத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரு மடங்காக ஆகி வருகிறது.

அங்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவோருக்கான படுக்கைகள் தேவை, 1 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அந்த மாகாண கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ கூறி உள்ளார். தற்போது அங்கு இருப்பு 53 ஆயிரம் படுக்கைகள்தான்.

இதன்காரணமாக நியூயார்க்கில் உள்ள ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை குறைந்த பட்சம் 50 சதவீதம் உயர்த்துமாறு கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரிகள் விரிவாக்கப்பணிகளை விரைவுபடுத்தி வருகின்றன.

குயின்ஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் முக கவசங்களை அணிந்து கொண்டு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்று கண்டறிவதற்காக நீண்ட வரிசைகளில் பரிசோதனைகூடங்களில் காத்து நின்றதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கி இறக்கிறவர்களின் உடல்களை வைப்பதற்காக நியூயார்க் நகர எல்ஸ்ஹர்ஸ்ட் ஆஸ்பத்திரி மற்றும் பெலீவ் ஆஸ்பத்திரிக்கு வெளியே குளிரூட்டப்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுவோருக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்கு செயற்கை சுவாச கருவிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நியூயார்க் மேன்ஹட்டன் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் 2 பேருக்கு ஒரே செயற்கை சுவாச கருவியை பயன்படுத்தி பார்க்கும் சோதனை தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் அடுத்து அங்கு லூசியானா மாகாணமும் அதிகபட்ச பாதிப்புக்கு ஆளாகி வருகிறது.

அங்கு வென்டிலேட்டர்கள் என்று அழைக்கப்படுகிற செயற்கை சுவாச கருவிகள், முக கவசங்கள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படத்தொடங்கி உள்ளது. பரிசோதனைக்கூட வசதிகளும் குறைந்த அளவிலேயே உள்ளன.

லூசியானாவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். வழக்கமாக அங்கு 30-40 சதவீத நோயாளிகள் மட்டுமே செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்படுகிற நிலையில் இருப்பார்கள். இப்போது அங்கு செயற்கை சுவாச கருவிகள் தேவை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் அணியக்கூடிய பாதுகாப்பு கவசங்கள், , கையுறைகள், கவுன்கள், கண்களில் அணியக்கூடிய கவசங்கள் ஆகியவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சுகாதார பணியாளர்கள் முக கவசங்களை மறுசுழற்சிக்கு விட்டு பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.

இங்குள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில், கொரோனா வைரஸ் பரவி வருவதை கட்டுப்படுத்தி குறைக்காவிட்டால் ஏப்ரல் 2-ந்தேதிக்கு பிறகு செயற்கை சுவாச கருவிகள் கிடைக்காது, ஏப்ரல் 7-ந் தேதிக்கு பிறகு படுக்கை வசதி கிடைக்காது என்று லூசியானா கவர்னர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் மத்திய மாகாண அரசுகளின் உத்தரவுகளுக்கு இணங்க அமெரிக்க மக்களில் பாதிப்பேர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதால் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக வீடுகளில் முடங்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேலை இல்லாதோருக்கான நிவாரண உதவி கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த வாரம் 32 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தாலும் கூட, கோடை காலம் நெருங்குவதால் வெப்பமான பருவநிலை, கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க கூடும் என்றாலும், குளிர்காலம் வரும்போது மீண்டும் இந்த வைரஸ் மீண்டும் வெளிப்படக்கூடும் என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டாக்டர் அந்தோணி பாசி கூறி உள்ளார்.

இதற்கிடையே வாஷிங்டன் மாகாணத்தில் மக்களை வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிற வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முடிய உள்ள நிலையில், மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கவர்னர் ஜே இன்ஸ்லீ கூறி உள்ளார். இந்த ஊரடங்கு காரணமாக சியாட்டில் நகர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்திருப்பது ஊக்கம் அளிப்பதாக இருப்பதே இதற்கு காரணம் என அவர் கூறி இருக்கிறார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவி வந்தாலும், 50 மாகாணங்களில் மக்களுக்கு மனித நேய உதவிகள் செய்வதற்காக 10 ஆயிரம் படை வீரர்கள் களம் இறக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story